Aug 22, 2017

44. நகதீதிதி ஸஞ்சந்ந நமஜ்ஜந தமோகுணா

நகதீதிதி ஸஞ்சந்ந நமஜ்ஜந தமோகுணா - பாத நகங்களின் காந்தியை கொண்டு தன்னை நமஸ்கரிப்பவர்களின் தாமஸத்தை போக்குபவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


Lalitha



அம்பிகையின் கால் நகங்கள் ஒளிப் பெற்று விளங்குகிறது. தேவர்களும் அசுரர்களும் வரம் வேண்டி ரத்தினங்கள் பதித்த, ஒளி பொருந்திய கிரிடங்களை உடைய தலையினை தேவியின் பாதங்களில் வைக்கும் போது,  தேவியின் பாத நகங்களில் இருந்து வெளிப்படும் ஒளியானது அந்த ரத்தினங்களின் ஒளியை மதிப்பிழக்க செய்கிறதாம். அந்த பாத நக ஒளியானது பக்தர்களின் தமோகுணத்தையும், அறியாமையும் போக்கும் வல்லமை உடையது.

அம்பிகையை யாரெல்லாம் நமஸ்காரம் செய்கிறார்களோ , அவர்களுக்கெல்லாம் அவள் ஞானத்தை அருள்கிறாள். தேவியை ப்ரம்மா, விஷ்ணு, சிவன், தேவாதி தேவர்கள் என்று எல்லோரும் நமஸ்கரிக்கிறார்கள்.

லலிதாம்பிகை வர - அபய கரங்களை கொண்டிருப்பதில்லை. இதை ஏற்கனவே சிந்தித்துள்ளோம். அவள் திருவடியில் இருக்கும் நகங்களே பக்தர்களின் விருப்பத்தை(வரம்) தருகிறது. அவர்களின் பயத்தையும்(அபயம்) போக்குகிறது.

ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் "தாயே! உன் கால் விரல்களின் நகங்கள்,  உன்னை வணங்க வருகின்ற வானவர்களின் மணிமுடிகளிலுள்ள மாணிக்கம்,  ரத்தினம்  போன்ற சாணைக் கற்களால் தீட்டப்பட்டு  இரும்பு கூர் போல்  இருக்கிறது." என்கிறார். மன்மதன் பரமேஸ்வரரை நோக்கி மலர் அம்புகள் விட்டு, அந்த ஐந்து பாணங்களும் உடையப்பட்டது. மன்மதன் தன்னிடமுள்ள ஐந்து பாணங்களைக் கொண்டு பரமேஸ்வரரை வெல்ல முடியாமல், மற்றொரு ஐந்து பாணங்களையும் தன்னுடைய தபோ மஹிமையால் தேவியின் கடாக்ஷத்தால் அவன் சம்பாதித்துக் கொண்டானோ என்று வர்ணிக்கிறார். அம்பிகையின் இரு பாதங்களில் உள்ள பத்து விதமான நகங்கள் மன்மதனுடைய பாணங்களின் நுனி பாகம் என்று கூறுகிறார் ஆதிசங்கரர்.

மேலும், தேவியின் பாத நகங்களின் காந்தியானது அநேக சந்த்ர கிரணங்கள் போல் விளங்குகிறது. சந்திரனைக் கண்டால் தாமரைப் புஷ்பங்கள் மூடிக் கொண்டுவிடும். அதுபோல தேவ ஸ்திரிகள்  அவர்களது கையை மூடி  தேவியை நமஸ்கரிக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது தேவ ஸ்திரிகளின் கைகள் பத்மத்தை போலவும், தேவியின் நகங்களின் காந்தி சந்திரன் போலவும், நககாந்தியாகிய சந்திரனைக் கண்டவுடன் தேவ ஸ்த்ரிகளுடைய கைகளாகிய பத்மம் மூடிக்கொண்டதோ என்று ஆதிசங்கரர் வர்ணிக்கிறார் தேவியின் நக காந்தியை.

அம்பிகையின் கால் நகங்களை த்யானிப்பதன் மூலம் அறியாமை என்னும் இருள் விலகும். இவ்வாறு தேவியின் பாத நகங்களின் காந்தியை "நகதீதிதி ஸஞ்சந்ந நமஜ்ஜந தமோகுணா" என்று வாக்தேவிகள் அம்பிகையை வர்ணிக்கின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

No comments:

Post a Comment