Feb 21, 2018

54. ஸ்வாதீந வல்லபா


ஸ்வாதீந வல்லபா- தன்வயப்பட்ட அன்பு மிக்க கணவரை உடையவள். 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா




லலிதாம்பிகையின் கணவராகிய காமேஸ்வரன் அவளுக்கு மாத்திரமே உரியவர். அம்பிகை சுதந்திரமானவள். அவள் பிறருக்கு கட்டுப்படாமல் அன்புக்கு உகந்தவளாக இருக்கும் தன்மை உடையவள். அப்பேற்பட்டவள், அந்த சிவகாமேஸ்வரரை தன்னுடைய வசத்தில் வைத்திருப்பவள்.

பரப்ரம்மமாகிய லலிதாம்பிகை தான் விரும்பும் போது தன்னிடமே காமேஸ்வரரைத் தோற்றுவித்து, அவரை தன் கணவராகக் கொண்டு அவரது மடியின் மீது அமர்ந்திருப்பவளாக காட்சியளிக்கின்றார்.

அம்பிகை சொன்னால் சிவகாமேஸ்வரர் எதை வேண்டுமானாலும் செய்வார். அம்பிகையின் மீது உள்ள அன்பால் ஈஸ்வரன் தனது தொடை மேல் அம்பிகையை வைத்து கொண்டாடுபவர்.

உலகத்திலுள்ள பதி-பத்னிகள் மாதிரி இல்லாமல் ஈஸ்வரனும் அம்பாளும் அநேக விதங்களில் வித்யாசமாக இருப்பவர்கள். உலகில் உள்ள ஸ்த்ரீகளை ‘அபலா’ என்கிறது வழக்கம். பலம் குறைந்தவர்கள் என்று அர்த்தம். கணவன் தான் தன் பலத்தினால் அவளுக்கு ரக்ஷையாக இருப்பவன். பலம் என்றாலும் சக்தி என்றாலும் ஒன்றுதான். சிவ-சக்தியை எடுத்துக் கொண்டாலோ ‘சக்தி’ என்பதே அவள் பெயராகத்தானிருக்கிறது! அவளில்லாவிட்டால் அவன் ஒன்றும் செய்வதற்கில்லாமல் கிடக்கவேண்டி இருக்கிறது. 

மேலும், சக்தியின் துணையின்றி சிவன் எதையும் செய்ய முடியாது. இதை ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் "சகல உலகங்களையும் படைக்கும் ஈசன்,  சக்தியாகிய உன்னுடன் இணைந்தால் தான் இந்த உலகத்தை படைக்க முடியும். சக்தி இல்லாமல் சிவனால் அசைவதற்கு கூட ஸாமர்த்தியம் உள்ளவராக இல்லை" என்று கூறுகிறார். 

இவளால் அவன், அவனால் இவள் என்று ஒருத்தருக்கொருத்தர் பெருமை சேர்த்துத் தருபவர்களாக ஆதி தம்பதியான காமேஸ்வரன் - காமேஸ்வரி இருக்கிறார்கள். வாஸ்தவத்தில் ஏற்றத் தாழ்வேயில்லாமல், அவர்கள் ஒருத்தருக்கு மற்றவர் ஸமம் என்று இருப்பவர்கள். ‘அன்யோன்ய ஸத்ருசம்’ என்று சொல்வது. ஈச்வரனும் அம்பாளும் ஸமமான மஹிமை உடையவர்கள். 

இவ்வாறு அன்பு மிக்க கணவரை உடையதால் வாக்தேவிகள் அம்பிகையை "ஸ்வாதீந வல்லபா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam