Aug 26, 2018

59. மஹா பத்மாடவீ ஸம்ஸ்தா

மஹா பத்மாடவீ ஸம்ஸ்தா - பெரிய தாமரை காட்டில் உறைபவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


ஸ்ரீநகரத்தின் நடுவில் 25வது கோட்டைக்கும், சிந்தாமணி க்ருஹத்திற்கும் இடையில் இருப்பதுதான் மஹா பத்ம வனம். இங்கு நிறைந்துள்ள தாமரை பூக்கள் நிலத் தாமரைகளாகும். அதுவும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை பூக்கள். தாமரை பூக்களின் ஒவ்வோர் இதழும் நூற்றுக்கணக்கான முழம் நீளமும் அகலமும் உடையது.

யோக சாஸ்திர அடிப்படையில், நமது உடலில், 6 ஆதாரங்களுக்கு மேல் உச்சியில் ஆயிரம் இதழ்த் தாமரை உள்ளது. சகஸ்ராரம் எனும் சக்கரம்.  சகஸ்ரார சக்கரத்திற்கு நடுவில் ஒரு துளை வடிவில் இருக்கும் பகுதியை ப்ரம்மாந்திரம் அல்லது மஹாபத்மாடவி என்பர். ப்ரபஞ்சத்தில் உள்ள தெய்வ சக்தி இந்த துளையின் ஊடாக மட்டுமே மனித உடலில் இறங்கும். உலகத்தின் ஊடான தொடர்பு இந்த துளையின் வழியாகத்தான் ஏற்படுகிறது. இந்த துளை ஆறு ஆதாரங்களுடனும் இணைக்க படுகிறது.

குண்டலினி என்னும் ஆற்றலை யோக சாஸ்திர முறைப்படி சிறிது சிறிதாக உயர்நிலைக்கு ஏற்றி கொண்டு போனால் சகஸ்ரார பத்மத்தை அடையலாம்.   சிவனுடன் லலிதாம்பிகை சசஸ்ராரத்தில் தான் இணைகிறாள். சகஸ்ராரத்தின் நடுவில் உள்ள மஹாபத்மாடவியில், அதாவது பெரிய தாமரைக்காட்டில் தேவி லலிதாம்பிகை உறைகிறாள்.

இவ்வாறு தேவி லலிதாம்பிகை ஸ்ரீநகரத்தில் உள்ள அடர்ந்த தாமரைக் காட்டில் உறைகிறாள் என்பதை தான் "மஹா பத்மாடவீஸம்ஸ்த்தா " என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

58. பஞ்ச ப்ரம்மாஸன ஸ்திதா

பஞ்ச ப்ரம்மாஸன ஸ்திதா - பஞ்ச ப்ரம்மங்களையும் ஆசனமாக கொண்டவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா


அம்பிகை சிந்தாமணி கற்களால் கட்டப்பட்ட க்ரஹத்தின் உள்ளே தனது சிம்ஹாஸனத்தில் பஞ்ச
 ப்ரம்மாக்களையும்  ஆசனமாக கொண்டு இருக்கிறாள்.

ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐவரும் சக்தியோடு சேர்ந்து இருக்கும் போது பஞ்ச ப்ரம்மாக்கள் எனவும், அவர்களே தனித்து இருக்கும் போது பஞ்ச ப்ரேதர்கள் எனவும் கூறுவர்.

ஸ்ருஷ்டிக்கு அதிபதியான ப்ரம்மா, ஸ்திதிக்கு அதிபதியான விஷ்ணு, சம்ஹார தொழிலுக்கு தலைவரான ருத்ரன், திரோபாவத்திற்கு அதாவது மறைத்தல் தொழிலுக்கு தலைவரான மஹேஸ்வரன் ஆகிய நான்கு தேவதைகளும் நான்கு கால்கள். இந்த நான்கு கால்கள் ஒரு பீடத்தை தாங்கி கொண்டிருக்கிறது. அந்த பீடம் தான் சதாசிவன். சதாசிவன் அனுக்கிரஹ தொழிலுக்கு அதிபதி. அதாவது லலிதாம்பிகை அனுக்கிரஹத்திற்கும் மேலே அமர்ந்திருக்கிறாள். இந்த பஞ்ச ப்ரம்மாக்களையும்  தன் ஆசனமாக லலிதாம்பிகை கொண்டிருக்கிறாள்.

யோக சாஸ்திரத்தின் அடிப்படையில், நமது சரீரத்தில் மூலாதாரம் என்னும் சக்கரத்தின் அதிபதியான விநாயகர் லலிதாம்பிகையின் பாதுகைகளை தாங்குபவராகவும், ஸ்வாதிஷ்டானம் - மணிபூரகம் - அநாகதம் - விசுக்தி என்னும் நான்கு சக்கரங்களிலும் உள்ள ப்ரம்மா - விஷ்ணு - ருத்ரன் - மஹேஸ்வரன் ஆகிய ஈஸ்வரர்கள் நான்கு தேவி லலிதாம்பிகை சிம்ஹாஸனத்தின் நான்கு கால்கள் என்றும், ஆக்ஞா சக்கரத்தில் உள்ள சதாசிவன் மேற்பலகை என்றும், சிரசில் உள்ள சகஸ்ரார கமலத்தில் அம்பிகை வீற்றிருக்கிறாள் என்று சொல்லப்படுகிறது.

இவ்வாறு அம்பிகை பஞ்ச பிரம்மாக்களை தன் ஆசனமாக கொண்டிருக்கிறாள் என்பதை தான் வாக்தேவிகள் "பஞ்ச ப்ரம்மாஸன ஸ்திதா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam