Nov 11, 2018

60. கதம்ப வன வாஸிநீ

கதம்ப வன வாஸிநீ - கதம்ப மலர்கள் அடர்ந்த வனத்தின் நடுவில் உறைபவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


ஸ்ரீலலிதாம்பிகையின் இருப்பிடமான சிந்தாமணி க்ரஹம் தெய்வீக நறுமணம் மிகுந்த இந்த கதம்ப வனத்தால் சூழப்பட்டது.

அம்பிகைக்கு மிகவும் பிடித்தது கதம்ப வனம். கதம்ப வன சுந்தரியாக இருப்பவள். லலிதாம்பிகையின் சிந்தாமணி க்ரஹத்தை சுற்றி 25 கோட்டைகள் உள்ளது.  ஸ்ரீ நகரத்தின் 25 கோட்டைகளுள் 7 வது வெள்ளி கோட்டைக்கும், 8 வது தங்கக் கோட்டைக்கும் இடையில் தான் கதம்ப மலர்கள் நிறைந்த வனம் உள்ளது.

ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வோர் அதிதேவதை உண்டு. அவ்வாறு இந்த கதம்ப வனத்தின் அதிதேவதையாக இருப்பவள் மந்த்ரிணி தேவி எனப்படும் ராஜஸ்யாமளை. இவள் 90 பீஜங்கள் உடைய மந்திரத்தின் ப்ரம்ம வித்தைக்கு அதிபதியாக விளங்குகிறாள்.

லலிதாம்பிகை தனது ராஜ்ய பாரம் அனைத்தையும் ஸ்யாமளா தேவியிடம் கொடுத்து அவள் உருவத்தில் இருந்து எல்லாக் காரியங்களையும் செய்து வருகிறாள். ஸ்யாமளா தேவியை ராஜமாதங்கி என்றும் அழைப்பதுண்டு.

இப்பூவுலகில், மதுரையைக் கடம்பாடவி என்றும் கதம்பவனம் என்று குறிப்பிடுகின்றனர். அங்கு ஸ்யாமளா தேவியானவள் மீனாட்சியாக உறைகிறாள்.

மேரு மலையின் உச்சியில் ஸ்ரீநகரமும், அதன் நடுவில் கதம்ப வனமும், அதன் நடுவில் பெரிய தாமரைக் காடும், அதன் நடுவில் சிந்தாமணி க்ரஹமும், க்ரஹத்தின் மத்தியில் ஸ்ரீசக்ர மேரு பீடமும், மேரு பீடத்தின் நடுவில் பிந்து பீடமும், பிந்து பீடத்தின் நடுவில் பஞ்ச பிரம்மாக்களையும் ஆசனமாக கொண்டு ஸ்ரீ லலிதா தேவி அமர்ந்து இருக்கிறாள். இவ்வாறு தேவியை த்யானம் செய்தல் வேண்டும்.

அம்பிகை கதம்ப வனத்தில் இருப்பதால் வாக்தேவிகள்  " கதம்ப வன வாஸிநீ " என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam