Jul 18, 2017

28. மந்தஸ்மித பிரபா பூர மஜ்ஜத் காமேச மாநஸா

மந்தஸ்மித  பிரபா பூர மஜ்ஜத் காமேச மாநஸா - புன்சிரிப்பின் ஒளிப்பிரவாகத்தில் காமேசுவரரின் மனம் முழுகிக் கொண்டிருக்கச் செய்தவள்.
ஸ்மிதம் என்றால் சிரிப்பு என்று பொருள். மந்த ஸ்மிதம் என்றால் மயக்குகின்ற சிரிப்பு என்ற பொருளாகும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha

லலிதாம்பிகை  அக்னிக்குண்டத்தில் இருந்து வெளிப்பட்டவுடன், சிவனும் காமேஸ்வரராக தோன்றினார். அம்பிகை தோன்றும் போது அவளுடைய புன் சிரிப்பின் அழகொளியானது பெருகி ஓடுகின்றது. அப்போது காமேஸ்வரனின் மனம் அந்த பெரும் ஒளி வெள்ளத்தில் மூழ்கி, அதிலிருந்து வெளி வர முடியாமல் அதிலேயே திளைத்திருக்கின்றதாம்.
ஆதிசங்கரரும் அம்பிகையின் புன்சிரிப்பை அமுதம் போன்ற முழு நிலவின் கிரணங்கள் என்று போற்றுகிறார்.
அம்பிகை தன் வசீகர புன் சிரிப்பால்,  பக்தர்களை கவர்ந்து அவர்களுக்கு ஞானம் அளித்து, இறுதியில் முக்தியை தருகிறாள். இதனைத்தான் வாக்தேவிகள் அம்பிகையை "மந்தஸ்மித  பிரபா பூர மஜ்ஜத் காமேச மாநஸா" என்று போற்றுகின்றனர்.
காஞ்சி  மூக கவி அன்னை காமாட்சியின் புன்முறுவலை வருணித்து 'மந்தஸ்மித சதகம்' என்னும் தலைப்பில் நூறு பாடல்கள் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Jul 15, 2017

27. நிஜ ஸல்லாப மாதுர்ய விநிர் பர்த்ஸித கச்சபீ:

நிஜ ஸல்லாப மாதுர்ய விநிர் பர்த்ஸித கச்சபீ: - தனது குரல் இனிமையால் சரஸ்வதியின் கச்சபீ வீணையை மதிப்பிழக்க செய்தவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


மிக உயர்ந்த வீணைகளுக்குப் பெயர்கள் உண்டு. விசுவாவசுவின் வீணையின் பெயர் ப்ருஹதீ. தும்புருவின் வீணை கலாவதீ. நாரதர் வீணை மஹதீ. அன்னை சரஸ்வதியின் வீணை கச்சபீ. இவை ஒன்றை விட ஒன்று உயர்ந்தது.
பொதுவாக இனிமையான இசையை தருவது வீணை. சரஸ்வதியோ 64 கலைகளுக்கும் அதிபதி.  அவளுடைய வீணை இசையின் இனிமையை சொல்லவா வேண்டும்? இனிமையிலும் இனிமையாக இருக்கும்.
ஒருசமயம் அன்னை லலிதாம்பிகை தன் பரிவாரங்கள் புடைசூழ வந்து அரியணையில் அமர்ந்தாள். சபையே ஆரவாரம் அடங்கி அமைதியாக இருந்தது. அப்போது,  சரஸ்வதி தனது கச்சபீ வீணையை எடுத்து இனிய நாதம் மீட்டினாள். உடனே அனைத்து தேவர்களும் மெய்மறந்தனர். அன்னை லலிதா பரமேஸ்வரி சரஸ்வதியை பாராட்ட விரும்பி, மெல்லத் தன் பூவிதழ் திருவாய் மலர்ந்து, ''ஸபாஷ்! " என்று உரைத்தாள். .
அம்பிகையின் குரல் இனிமை சரஸ்வதியின் வீணை நாதத்தைக் காட்டிலும் இனிமையாக ஒலித்தது.  குரலின் இனிமை  காந்தம் போன்ற கவர்ச்சியில் அண்டசராசரமும் ஒருகணம் அசையாமல் நின்றது. இதை உணர்ந்த சரஸ்வதி ஓடோடி வந்து அன்னையைப் பணிந்தாள். 
அம்பிகையின் குரல் மதுரமானது. உண்மையான இனிமையே அவளிடம் தான் இருக்கிறது. அவளின் பேச்சு இனிமையால் சரஸ்வதியின் வீணை ஒன்றுமில்லாமல் போய்விட்டது. இதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "நிஜ ஸல்லாப மாதுர்ய விநிர் பர்த்ஸித கச்சபீ: " என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Jul 14, 2017

26. கற்பூர வீடிகா மோத ஸமாஹர்ஷ திகந்தரா

கற்பூர வீடிகா மோத ஸமாஹர்ஷ திகந்தரா - கற்பூர வீடிகம் என்னும் தாம்பூல நறுமணத்தால் எத்திக்கில் உள்ளோரையும் ஈர்ப்பவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha



கற்பூர வீடிகம் என்பது நறுமணம் தரும் பொருட்களை கொண்டு செய்யப்படும் தாம்பூலம். அவற்றில் வெற்றிலை, பாக்கு, ஏலம், பச்சைக் கற்பூரம், லவங்கம், குங்குமப்பூ, கஸ்தூரி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி போன்ற பொருள்கள் சேர்க்கப்படும். இந்த கற்பூர வீடிகத்தை அம்பிகை சுவைக்கிறாள்.
மேலும், அம்பிகை இந்த கற்பூர வீடிகத்தை சுவைக்கும் போது வரும் வாசனை இந்த ப்ரபஞ்சத்தையே நறுமணமாக்குகிறது. அதனால் திசையெங்கும் நறுமணம் பரவுகிறது. அத்துடன், அந்த நறுமணமானது அனைவரையும் ஈர்க்கிறது.
அதாவது, அறியாமை உடைய மனிதனை அறிவாகிய வாசனையால் கவர்கிறாள் அம்பிகை. புத்தி உடைய மனிதன் தனது பக்தியால் அம்பிகையை அடைகிறான். ஆனால் அறிவு இல்லாதவனோ அம்பிகையை அடைவதற்கு ஒரு உந்துகோல் தேவைப்படும். அந்த உந்துகோலே தேவியின் தாம்பூல வாசனை. அந்த வாசனையே எத்திக்கில் உள்ளோரையும் அவள் பக்கம் சேர்த்துவிடுமாம்.
அதனால் தான் வாக்தேவிகள் அம்பிகையை "கற்பூர வீடிகா மோத ஸமாஹர்ஷ திகந்தரா" என்று போற்றுகின்றனர். மேலும் அம்பிகையின் தாம்பூல ரஸத்தை பருகியவர்கள் மிகப்பெரிய கவிஞர்களாவார்கள்.
திருவானைக்காவலில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரி அம்மையின் தாம்பூல ரஸத்தை உண்டுதான் காளமேகம் பெரும் கவிஞர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Jul 13, 2017

25. சுத்த வித்யாங்குராகார த்விஜ பங்க்தி த்வயோஜ்வலா

சுத்த வித்யாங்குராகார த்விஜ பங்க்தி த்வயோஜ்வலா - சுத்த வித்தையே முளைத்தாற் போன்ற இரு பல் வரிசைகளை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


த்விஜ என்பது இரண்டு முறை பிறப்பதற்குப் பெயர். பல், பறவை, அந்தணன் ஆகியவர்கள் இருப்பிறப்பாளர்கள். பால்பற்கள் விழுந்து புது பற்கள் முளைக்கும். பறவை முட்டையிட்டு பின் குஞ்சுப் பொரிக்கும். அந்தணன் பிறந்து பின் உப நயனம் செய்யும் போது மீண்டும் பிறந்ததாகவே அர்த்தம். ஆக இவையெல்லாம் 'த்விஜம்' என்று பெயர்.

மேலும், அம்பிகையின் பற்கள் சுத்த வித்தை போல் உள்ளதாம். சுத்த வித்தை என்றால் ஸ்ரீவித்தையை குறிக்கிறது. ஸ்ரீவித்தை என்பது ஸ்ரீலலிதாம்பிகையின் மிகவும் சக்தி வாய்ந்ததும், மிகவும் ரகசியமானதுமான பூஜை முறைகளை கொண்ட சாதனை முறை. இந்த பூஜா முறைகள் எளிதில் யாருக்கும் கிடைக்காது. அவற்றை ஸ்ரீவித்யா குரு மூலமாகவே அறிய முடியும். ஸ்ரீவித்யா பூஜா முறைகளை கற்றவன் சாக்ஷாத் அம்பிகையே. சுத்த வித்தை என்பது தூய்மையான அறிவு.

ஸ்ரீவித்தைக்கு விதையாக விளங்குவது ஷோடஷி மந்திரம். ஷோடஷி  மந்திரம் 16 அக்ஷரங்களை கொண்டது. இந்த விதை முழைக்கும் போது இரு இலைகளாக உருவெடுக்கிறது. ஒரு இலையில் 16 வீதம் 16×2=32 ஆகிறது. இந்த ஷோடஷாக்ஷரி அக்ஷரங்களே  அம்பிகையின் த்விஜ பங்க்தி பல் வரிசைகளாக இருக்கிறதாம்.

அவள் பல் வரிசைகளே நமக்கு ஞானத்தை, நல் அறிவை கொடுக்கும். ஞானம் வருவதே மனிதனின் இரண்டாவது பிறப்பாகும்.

அம்பிகையின் த்விஜ பங்க்தி பல் வரிசை, சுத்த வித்தை முளை விட்டதைப் போல் அமைந்துள்ளதால் தான் வாக்தேவிகள் அம்பிகையை "சுத்த வித்யாங்குராகார த்விஜ பங்க்தி த்வயோஜ்வலா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Jul 12, 2017

24. நவ வித்ரும பிம்ப ஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா

நவ வித்ரும பிம்ப ஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா - புதிய பவளம், கோவை பழம் இவற்றை பழிக்க செய்யும் உதடுகளை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா


சாதாரணமாக உதட்டின் சிவப்புக்கு பவழம், கோவைப்பழம் போன்றவற்றை உதாரணங்களாக காட்டுவார்கள். அதுவும் புதிய பவளம் மிகவும் சிவந்திருக்கும்.

மேலும், பிம்பம் என்றால் கோவை. பிம்பம் என்றாலே ப்ரதிபிம்பம் என்றும் அர்த்தம். அப்படித்தான் இந்த கோவைக்கும் பிம்பப் பேர் உண்டாயிற்று. அம்பிகை உதடுதான் அதற்கு மூல பிம்பம்.  அந்தக் காயின் பளபளப்பான தோலின்மேல்  அம்பிகை தன் உதட்டின் ப்ரதிபிம்பம் விழச்செய்து அதைச் செக்கச் சிவக்க ஆக்கி ‘பிம்பம்’ என்கிற பெயர் பெறும்படியாகப் பண்ணியிருக்கிறாள். இருந்தாலும் அதற்கு மூல பிம்பத்தின் சிவப்பு வரவில்லையாம். அவ்வளவு சிவப்பு வாய்ந்தது அம்பிகையின் உதடுகள்.

ஸ்ரீலலிதாம்பிகையின் உதடுகள் இந்த பவழம், கோவைப்பழ சிவப்பையெல்லாம் தோற்கடித்து விட்டதாம். அவளின் செவ்விதழ்கள் இயற்கை அழகும், மிகுந்த காந்தியும் உடையது. இதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "நவ வித்ரும பிம்ப ஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

23. பத்மராக சிலாந் தர்ஷ பரிபாவி கபோலபு:

பத்மராக சிலாந் தர்ஷ பரிபாவி கபோலபு: - பத்ம ராக கண்ணாடியை தோற்கடிப்பதுப் போன்ற பளபளப்பான கன்னங்களை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


மாணிக்ய கற்கள் நான்கு விதம்.  விப்ரா,குருவிந்தா,ஸௌகந்திகம் மற்றும் மன்ஸ கண்டா. அவற்றுள் பத்மராக கல்லும் ஒரு விதமான மாணிக்க கல்தான்.

தேவி லலிதாம்பிகை செந்நிற மாணிக்ய கற்களை பதித்த காதணிகளை காதுகளில் அணிந்திருக்கிறாள். காதணிகளின் மாணிக்ககற்கள் செந்நிறத்தை பிரதிபலிப்பதனால் கன்னங்களும் செந்நிறமாக  காட்சியளிக்கிறது.

மேலும் தேவியின் நிறமே சிவப்பு தானே! சிவப்பு கருணையின் நிறம். சந்திரன், சூரியன் மற்ற ஆபரணங்கள் எல்லாம் தேவியின் உடலை அலங்கரிப்பதால் அம்பிகை செந்நிறமாகவே காட்சியளிக்கிறாள்.

தேவி லலிதாம்பிகையின் கன்னங்கள் மிருதுத் தன்மையுடையதும், பளபளப்பாகவும்  இருக்கின்றது. அவளது கன்னங்கள் பத்ம ராக கற்கள் போன்று சென்னிறமாக பளபளக்கின்றன என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "பத்மராக சிலாந் தர்ஷ பரிபாவி கபோலபு:" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam



Jul 10, 2017

22. தாடங்க யுகளிபூத தபநோடுப மண்டலா

தாடங்க யுகளிபூத தபநோடுப மண்டலா - சூரிய சந்திர மண்டலங்களயே இரு தோடுகளாக உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா


தபனன் என்றால் சூரியன், உடுபன் என்றால் சந்திரன். அம்பிகை தனது இடது காதில் சந்திரனையும் வலது காதில் சூரியனையும் தாடங்கங்களாக அணிந்திருக்கிறாள்.

அக்கால பெண்கள் காதில் பனை ஓலையை தான் காதணியாக அணிந்தனர். இன்றும் அம்பிகைக்கு காதோலையும் கருகுமணியும் வைத்து வழிபடும் வழக்கம் உண்டு.

தாலி, தோடு இரண்டும் விசேஷமான ஸெளமாங்கல்யா ஆபரணங்களாகும். அதுவும் அம்பிகையின் தாடங்கத்திற்கு வெகு சிறப்பு உண்டு.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, ஆலகால விஷம் வந்தது.  சிவபெருமான் அந்த விஷத்தை அப்படியே விழுங்கிவிட்டார். பின்னர் தேவர்கள் அமுதத்தை அருந்தினர். அந்த அமுதம் உண்ட தேவர்கள் கூட ப்ரளய காலத்தில் அழிந்து போனார்கள். ஆனால் நஞ்சை உண்ட சிவபெருமான் அழியவில்லை. அதற்கு காரணம் என்ன என்றால் அம்பிகையின் காதுகளில் உள்ள தாடங்கத்தின் மேன்மையே.

அம்பிகையே மங்களமானவள். ஸர்வ மங்கள மாங்கல்யே என்றே அவளை போற்றுவர். மங்களமே வடிவான அம்பிகை மகா சுமங்கலி. அவளுடைய சௌமங்கலியத்துக்கு எப்படி பங்கம் உண்டாக முடியும்? இதனால்தான் அவளுடைய தாடங்க மகிமையால்,  ஆலகால விஷம் சாப்பிட்டுகூடப் பரமேசுவரன் சௌக்கியமாகவே இருக்கிறார்.

இதனால் தான் வாக்தேவிகள் அம்பிகையை "தாடங்க யுகளிபூத தபநோடுப மண்டலா" என்று போற்றுகின்றனர்.

மேலும், திருக்கடவூரில் அபிராமி பட்டருக்கு ஆடி அமாவாசை அன்று தனது இடது காதில் உள்ள சந்திரனை வீசியே முழு நிலவை காட்டினாள் என்பது குறிப்பிடத்தக்கது.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam



21. கதம்ப மஞ்ஜரி க்லுப்த கர்ண பூர மனோஹரா

கதம்ப மஞ்ஜரி க்லுப்த கர்ண பூர மனோஹரா -மனதை கவரும் அழகுடன் கதம்ப பூவை செவிப் பூவாக உடையவள்.



🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha

மஞ்சரி என்றால் பூங்கொத்து என்று பொருள். பழமைக் காலத்தில் பெண்கள் இயற்கையான மலர்களை கொண்டு அவர்கள் காதுகளை அலங்கரித்துக் கொள்ள விரும்புவதுண்டு.

காது மடல்களின் கீழ்ப்பகுதியில் அணிவது தோடு. அங்கிருந்து மேல் நோக்கி வரிசையாக சிலபேர் துளையிட்டு அதில் நகை போடுவதுண்டு. அந்த மாதிரி அணிய கூடியது தான் செவிப்பூக்கள்.

அம்பிகை ஸ்ரீபுரத்தில் உள்ள கதம்ப மரத்தின் பூங்கொத்தினை செவிப்பூவாக அணிந்திருக்கிறாள். அந்த செவிப்பூவும் அதன் நறுமணமும் பார்ப்பவரின் மனதை கவர்கிறதாம். அந்த பூக்களானது அம்பிகையின் செவியில் பட்டதாலே மிகுந்த தெய்வீக நறுமணத்தை பெறுகிறது. இதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "கதம்ப மஞ்ஜரி க்லுப்த கர்ண பூர மனோஹரா" என்று போற்றுகின்றனர்.



🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Jul 8, 2017

7. சதுர்பாஹு சமன்விதா

சதுர்பாஹு சமன்விதா - நான்கு கரங்களை கொண்டவள்.



🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா


இங்கிருந்துதான் அன்னையின் ரூப லாவண்யத்தை சொல்ல ஆரம்பிக்கிறார்கள் வாக்தேவிகள் .

எந்த ஒரு தெய்வ திருமேனியை பார்க்கும் போது சாதாரணமாக எல்லோரும் பார்ப்பது ஒரு கரம் அபய ஹஸ்தமாகவும், மற்றொரு கரம் வர ஹஸ்தமாகவும் இருக்கும். அவை மரண பயத்தை போக்கவும், வரத்தை அருளவும். நாம் அம்மா என்று அவள் கால்களில் விழும் போது அந்த பயத்தை அபய ஹஸ்தம் கொண்டு போக்குகிறாள். அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கும் போது வர ஹஸ்தம் நமக்கு வரத்தை அளிக்கிறது.
ஆனால் லலிதாம்பிகையிடம்  அபய - வர ஹஸ்தம் இருக்காது. ஏனெனில் அவள் திருவடிகளே பயத்திலிருந்து காத்து விடுகிறது. அத்திருவடிகளே அவரவர் விரும்புவதற்கு அதிகமாக வரமும் அளித்து விடுகிறது.அபய - வர ஹஸ்தம் காட்டி ஆள வேண்டிய அவசியம் உனக்கு இல்லை அதனால் தான் உன் திருக்கரங்களில் அதற்கான அடையாளம் இல்லை" என்று ஆதிசங்கரர் சொன்னார். குழந்தைக்கு தேவயானதை தேவையான நேரத்தில் கொடுப்பதற்கு தாய்க்கு தெரியாதா?
மேலும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களையும் அவளே அருள்கிறாள் என்பதை காட்டும் பொருட்டு நான்கு கைகளுடன் அம்பிகை விளங்குகிறாள். அதாவது நான்கு கரங்களை கொண்டவள் என்பதை தான்  சதுர்பாஹு சமன்விதா என்று வாக்தேவிகள் அம்பிகையை போற்றுகின்றனர்.



🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam





20. தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பூஷிதா

தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பூஷிதா - நக்ஷத்திரத்தின் ஒளியை தோற்கடிக்கும் பிரகாசத்தோடு கூடிய மூக்குத்தியினால் மிளிர்பவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


Lalitha


அம்பிகையின் மூக்குத்தியில் ஒன்று வெள்ளை கல்லால் ஆனது. மற்றொன்று சிவப்பு கல்லால் ஆனது. சிவப்புக் கல் மாணிக்கம் மற்றும் வெள்ளை கல் வைரம்.

தாரா என்பது மங்களா , சுக்லா ஆகிய இரண்டும் தேவதைகளை குறிக்கும். சுக்லா என்பது சுக்ரன் மற்றும் தாரா என்பது செவ்வாய். இந்த இரண்டு நக்ஷத்திரங்களும் அதிகம் மின்னுபவை.
மேலும் அம்பிகையின் மூக்குத்தியில்  சிவப்பு மாணிக்கம் செவ்வாயையும், வெள்ளை வைரம் சுக்ரனையும் குறிக்கின்றது.

வானில் சுக்ரன் வெண்மை ஒளியையும், செவ்வாய் சிவப்பு ஒளியையும் வழங்கும் சுடர்கள். அந்த இரு சுடர்களின் ஒளியையும் மிஞ்சி விடுகிறதாம் அம்பிகையின் இரண்டு மூக்குத்திகள்.
அதனால் தான் வாக்தேவிகள் அம்பிகையை "தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பூஷிதா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam




Jul 6, 2017

19. நவ சம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா

நவ சம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா - புதிதாக மலர்ந்த செண்ப பூப்போன்று ஒளிர்கின்ற மூக்குத் தண்டின் அழகுடன் திகழ்பவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


செண்பப் பூவானது மென்மை, நிறம், ஒளி, வடிவம் ஆகிய அனைத்தும் உடையது.  செண்பக பூவை பெண்களின் மூக்கிற்கு உவமை படுத்துவது உண்டு.

அம்பிகையின் நாசியும்(மூக்கு)  புதிதாக  மலர்ந்த செண்பக மலர்போன்று இருக்கின்றதாம். அது நாசியானது பிரகாசம் அடைந்தும் இருக்கிறது. அதனால் தான் வாக்தேவிகள் அம்பிகையை "நவ சம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

18. வக்த்ர லக்ஷ்மீ பரிவாக சலன் மீனாப லோசனா

வக்த்ர லக்ஷ்மீ பரிவாக சலன் மீனாப லோசனா - முகத்தின் அழகு வெள்ளத்தில் செல்லும் மீன்களை போன்ற கண்களை உடையவள்.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸



லலிதா

அம்பிகை மீனலோசனி. அவளின் திருமுகத்தில் அழகு பிரவகிக்கிறது. அந்த ப்ரவாகத்தில் ஓடுகின்ற மீன்கள் தான் அவளது கண்களாம்.

நீரிலுள்ள மீன்கள் தன்னுடைய முட்டைகளை ஓரிடத்தில் வைத்து அதை பார்த்து கொண்டே இருக்கும். அந்த பார்வையினாலே முட்டையிலுள்ள குஞ்சுகள் பக்குவமடைந்து வெளிவரும். அதுபோல தான் அம்பிகையும் தனது கருணை கடாக்ஷத்தால் பக்தர்களாகிய குழந்தைகளை வளர்க்கிறாள்.

மேலும் மீன்கள் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டே இருக்கும். அதுபோல   அம்பிகையின் கண்களும் எப்போதும் சலனப் பட்டுக் கொண்டே இருக்கும். அதாவது அசைந்து கொண்டிருக்கும்.
எப்போதும் அம்பிகையின் கண்கள் பக்தர்களாகிய குழந்தைகளை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டே இருக்கின்றதாம்.

பக்தர்களின் விருப்பத்தையும், அவர்களுக்கு தேவையானது என்ன என்பதையும் அறிந்து அவளுடைய கருணை கண்களே பூர்த்தி செய்து விடுமாம். அதனால் தான் லலிதாம்பிகையை "வக்த்ர லக்ஷ்மீ பரிவாக சலன் மீனாப லோசனா" என்று வாக்தேவிகள் போற்றுகின்றனர்.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

17. வதன ஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா

வதன ஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா - மன்மதன் வசிக்கும் மங்கள வீடாகிய முகத்தில், தோரணங்கள் போன்ற புருவங்களை கொண்டவள்.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


ஸ்மரன் என்பது மன்மதனுடைய பெயர்.
அழகு மற்றும் அழகு கலைகளுக்குப் பெயர் பெற்றவர் மன்மதன். மன்மதன் இருக்கும் இடம் மங்களகரமாக இருக்கும். மங்களகரமான வீட்டில் முன்னால் தோரணங்கள் அழகு செய்யும். தோரணம் என்றால் மாவிலை தோரணம் அல்ல. அலங்கார நுழைவு வாயில்கள்(Arch) தோரணம் போல காட்சியளிக்கும்.

அவ்வாறு அம்பிகையின் முகத்தை மன்மதன் குடியிருக்கும் வீடாகவும், அந்த வீட்டில் தோரணம் போன்ற இரு புருவங்களை கொண்டிருக்கிறாள் என்பதை தான் "வதன ஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா" என்று வாக்தேவிகள் போற்றுகின்றனர்.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam


16. முக சந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷகா

முக சந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷகா -  முகமாகிய சந்திரனிலிருக்கின்ற களங்கம் போல விளங்குகின்ற கஸ்தூரி திலகம் உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


லலிதா


அம்பிகையின் முகமானது பூர்ண சந்திரன் போல உள்ளது. அந்த முகத்தில், கூந்தலின் முன்னால் இருக்கும் கற்றைகள் நெற்றியில் சுருண்டு சுருண்டு விழுகின்றன. அதுதான் அளகம். கூந்தல்கள் விழும் நெற்றியின் பகுதி.

ம்ருகம் என்றால் மான். கஸ்தூரி மான். அதனிடமிருந்து கஸ்தூரி கிடைக்கும். அம்பிகை திருநெற்றியில் அந்த கஸ்தூரியை திலகமாக அணிந்திருக்கிறாள் என்பதை தான் "முக சந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷகா" வாக்தேவிகள் போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

15. அஷ்டமி சந்த்ர விப்ராஜ தலிகஸ்தல ஸோபிதா

அஷ்டமி சந்த்ர விப்ராஜ தலிகஸ்தல ஸோபிதா - அஷ்டமி திதியில் உள்ள சந்திரன் போன்ற அழகான நெற்றியுடன் சுந்தரமாக தோன்றுகின்றவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


அமாவாசை அல்லது பௌர்ணமி கழிந்த எட்டாவது நாள் அஷ்டமி திதி என்று சொல்லப்படும். அன்று சந்திரன் அரை வட்டமாக காணப்படும்.

பிறை சந்திரன் என்னும் போது மூன்றாம் பிறை, நான்காம் பிறை என்று சொல்லவில்லை. ஏனெனில் அதில் நடுவிலே ஒரு பள்ளம் இருக்கும். அதனால் தான் அஷ்டமி திதியை சொல்கிறார்கள்.

அஷ்டமி அன்று நிலவு உதயமாகும் போது அரை வட்டமான தங்க தகடு போலச் சிவப்பாய் இருக்கும். அம்பிகையின் நெற்றி அதை போல இருக்கின்றதாக வாக்தேவிகள் "அஷ்டமி சந்த்ர விப்ராஜ தலிகஸ்தல ஸோபிதா" வர்ணிக்கின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam