Jul 15, 2017

27. நிஜ ஸல்லாப மாதுர்ய விநிர் பர்த்ஸித கச்சபீ:

நிஜ ஸல்லாப மாதுர்ய விநிர் பர்த்ஸித கச்சபீ: - தனது குரல் இனிமையால் சரஸ்வதியின் கச்சபீ வீணையை மதிப்பிழக்க செய்தவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


மிக உயர்ந்த வீணைகளுக்குப் பெயர்கள் உண்டு. விசுவாவசுவின் வீணையின் பெயர் ப்ருஹதீ. தும்புருவின் வீணை கலாவதீ. நாரதர் வீணை மஹதீ. அன்னை சரஸ்வதியின் வீணை கச்சபீ. இவை ஒன்றை விட ஒன்று உயர்ந்தது.
பொதுவாக இனிமையான இசையை தருவது வீணை. சரஸ்வதியோ 64 கலைகளுக்கும் அதிபதி.  அவளுடைய வீணை இசையின் இனிமையை சொல்லவா வேண்டும்? இனிமையிலும் இனிமையாக இருக்கும்.
ஒருசமயம் அன்னை லலிதாம்பிகை தன் பரிவாரங்கள் புடைசூழ வந்து அரியணையில் அமர்ந்தாள். சபையே ஆரவாரம் அடங்கி அமைதியாக இருந்தது. அப்போது,  சரஸ்வதி தனது கச்சபீ வீணையை எடுத்து இனிய நாதம் மீட்டினாள். உடனே அனைத்து தேவர்களும் மெய்மறந்தனர். அன்னை லலிதா பரமேஸ்வரி சரஸ்வதியை பாராட்ட விரும்பி, மெல்லத் தன் பூவிதழ் திருவாய் மலர்ந்து, ''ஸபாஷ்! " என்று உரைத்தாள். .
அம்பிகையின் குரல் இனிமை சரஸ்வதியின் வீணை நாதத்தைக் காட்டிலும் இனிமையாக ஒலித்தது.  குரலின் இனிமை  காந்தம் போன்ற கவர்ச்சியில் அண்டசராசரமும் ஒருகணம் அசையாமல் நின்றது. இதை உணர்ந்த சரஸ்வதி ஓடோடி வந்து அன்னையைப் பணிந்தாள். 
அம்பிகையின் குரல் மதுரமானது. உண்மையான இனிமையே அவளிடம் தான் இருக்கிறது. அவளின் பேச்சு இனிமையால் சரஸ்வதியின் வீணை ஒன்றுமில்லாமல் போய்விட்டது. இதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "நிஜ ஸல்லாப மாதுர்ய விநிர் பர்த்ஸித கச்சபீ: " என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

No comments:

Post a Comment