Sep 13, 2017

48. மஹா லாவண்ய ஷேவதி:

மஹா லாவண்ய ஷேவதி: - பேரழகுகளின் பொக்கிஷமானவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸



லலிதா


அம்பிகை அழகுக்கெல்லாம் அழகு. எல்லாரிடத்திலும், எல்லாப் பொருள்களிலும் உள்ள அழகெல்லாம் அம்பிகையின் அழகில் இருந்து தான் பெறப்படுகின்றது. அப்போதும் தேவியின் அழகு குறைவதில்லை. காரணம் அம்பிகை பூரணமானவள். பூரணத்திலிருந்து  எவ்வளவு எடுத்தாலும் குறைவு ஏற்படாது.

அம்பிகையின் அங்கங்களின் அழகை ஒவ்வொன்றாக விவரித்துப் பார்த்தாலும் முழுமையாக சொல்ல முடியவில்லை. அனைத்து அழகுகளும் சேர்ந்து ஓரிடத்தில் பொருந்தி குடியிருந்தால் எப்படி இருக்குமோ, அவ்வாறு அழகின் பொக்கிஷமாக, களஞ்சியமாக விளங்குகிறாள் லலிதாம்பிகை. நேராக ரூபத்தை வர்ணிக்க முடியாவிட்டாலும் ஒப்பிட்டாவது காட்டலாமா என்று பார்த்தால் அதற்கு உவமை காட்டும்படியாகவும் உலகத்தில் எதுவுமேயில்லை.

தேவியின் முழு ரூபத்தையும் எந்த கவிகளாலும் சொல்ல முடியவில்லை. பல பக்த கவிகள் தேவியை தர்சனம் செய்து தான் இருக்கிறார்கள். ஆனாலும் ஸம்பூர்த்தியாக எவரும் தன்னைப் பார்க்க விடாமல் ஏதோ கொஞ்சம், க்ஷண காலம்  மின்னல் மின்னுகிற மாதிரி தர்சனம் கொடுத்து விட்டு மறைந்து போய் விடுவாள். ஒரே பக்தியாக அவளிடமே மனசை அர்ப்பணித்தவர்களுக்கும் கூட அவளுடைய சரணாரவிந்தம், கடாக்ஷத்தைப் பொழியும் நேத்ரம், மந்தஸ்மிதம் செய்யும் திருவாய் என்றப்படி ஏதாவது ஒரு அவயம் தான் எப்போதும் கண்களில் கட்டி நிற்குமே தவிர கேசாதி பாதம் முழு ரூபமும் இல்லை.

ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் அம்பிகையை "படைக்கும் கடவுள்  பிரம்மாவினால் கூட உன்னுடைய பேரழகை வருணிக்க முடியவில்லை. தேவ கன்னியர்களும் உனது அழகை காண ஏங்குகின்றனர். சிவத்தினுடன் கலந்த அந்த வடிவம் பெரும் தவத்தாலும் அடைய முடியாது." என்று போற்றுகின்றார்.

ஆக எவ்வளவு வர்ணித்தாலும் அவளுடைய கேசம் முதல் பாதம் வரை உள்ள முழு உருவ அழகையும் எவராலும் இப்படித்தான் என்று கூற இயலாது. உலகில் உள்ள அனைத்து அழகுகளும் அம்பிகையிடம் இருந்து எடுத்தாலும் குறைவு படாத அழகு பொக்கிஷம் லலிதாம்பிகை என்பதை தான் வாக்தேவிகள் "மஹா லாவண்ய ஷேவதி:" என்று அம்பிகையை போற்றுகின்றனர்.

நாம் பார்க்கும் திசை தோறும் தேவியின் அவையங்களாக தெரியும் படியாகவும், அம்பிகையின் முழு ரூபத்தையும்,  த்யானம் செய்ய முயன்று, இறுதியில் சாயுஜ்ய பதவியை அடைவோம்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

47. மராளி மந்த கமநா

மராளி மந்த கமநா - ஹம்ஸம்(அன்னம்) போன்ற மென்மையான மெதுவான நடை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


Lalitha


ஹம்ஸம் என்றால் அன்னப்பக்ஷி. பெண்களின்  நடை அழகுக்கு அதிகபட்ச உவமையாக அன்னப்பறவையை கூறுவது உண்டு. அம்பிகையின் நடையோ அன்னப்பறவையை விட அழகானது. தேவி யாக குண்டத்தில் இருந்து வெளிப்பட்டு தேவர்களை நோக்கி நடந்தாள். அப்போது அவளுடைய நடை அன்னப்பறவையை விட மிக அழகாகவும், மெதுவாகவும் இருந்ததாம்.

அன்னப்பறவை, தேவியின் நடை அழகைப் பார்த்து தானும் அதுப்போல நடக்க முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனவாம். அவளுடைய சரணங்கள்  கருணைக் கொண்டு அந்த அன்னப்பறவைகளுக்கு கற்று கொடுக்கின்றதால் தான் அன்னப்பக்ஷிகள் நடக்க முயற்சி செய்கின்றதாம்.

ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் அம்பிகையை "தாயே !  உன்னுடைய  அழகான நடையினைப் பார்த்து, தானும்  அதைக் கற்றுக் கொள்ள நினைத்து, உன் வீட்டிலுள்ள அன்னப்பட்சிகள்,  துள்ளித்துள்ளி நடந்து , உன் அழகு  நடையைப் பின்பற்றி, உன்னைப் போல்  தானும் நடக்க பழக்கப் படுத்திக் கொள்கின்றன. நீ நடக்கும் பொழுது உன்  தண்டையிலுள்ள பத்மராகக் கற்கள்  எழுப்பும் ஓசையானது, அந்த அன்னப்பக்ஷிகளுக்கு  மறைமுகமாக  நடப்பதற்குப் பாடம் சொல்லித் தருவது போல்  உள்ளது" என்று வர்ணிக்கிறார்.

இவ்வாறு அன்னையின் நடையே அன்னநடை என்பதை வாக்தேவிகள் "மராளி மந்த கமநா" என்று அம்பிகையை போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Sep 8, 2017

46. சிஞ்ஞாத மணி மஞ்சீர மண்டித ஸ்ரீ பதாம்புஜா

சிஞ்ஞாத மணி மஞ்சீர மண்டித ஸ்ரீ பதாம்புஜா - ஒளிரும் ரத்தின பரல்களை கொண்ட சிலம்புகளால் அலங்கரிக்கப்பட்ட பாதங்களை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


அம்பிகையின் சிலம்பு ஒளி வீசும் ரத்தினங்களால் ஆனவை. சிலம்பு, தண்டை, பாடகம், கொலுசு போன்றவை மங்கள ஒலியை எழுப்புபவை. பெண்கள் நடக்கும்பொழுது ஒருவித இனிய ஒலியை எழுப்பும்.

ஆடும்பொழுது தாளத்திற்கேற்ப ஒலியெழுப்பவல்லது சிலம்பு. அவள் ஆட்டத்தில் எழும் ஒலியாலே, இந்த பிரபஞ்சத்தை உருவாக்குகிறாள் அம்பிகை.

வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகம். வெள்ளி நகைளை அணிவதால் ஆயுள் விருத்தியாகும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அதனால், வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டு கொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை உறுதிப்படுத்தவும் கொலுசு பயன்படுகிறது. எனவே, பெண்கள் கொலுசு அணிய வேண்டும் என்று காட்டுகிறாள் அம்பிகை.

அவள் சிலம்பின் ஒலி பக்தர்களின் துன்பங்களை விரட்டும். மங்களத்தை வழங்கும். இவ்வாறு தேவி அணிந்திருக்கும் சிலம்பு ஒளி வீசிக் கொண்டிருக்கிறது என்பதை தான் வாக்தேவிகள் "சிஞ்ஞாத மணி மஞ்சீர மண்டித ஸ்ரீ பதாம்புஜா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

45. பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா

பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா - தாமரையை மதிப்பிழக்க செய்யும் ஒளி நிறைந்த பாதங்களை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா



அம்பிகையின் இரு பாதங்களில் செவ்வொளி வீசுகிறது. அதனால் தாமரைப் பூக்கள் தேவியின் இரண்டு பாதத்திற்கு முன் அழகின்றி காணப்படுகிறது. தாமரையைக் காட்டிலும் அழகாகவும், ம்ருதுவாகவும், சிவப்பாகவும் இருக்கின்றது தேவியின் திருப்பாதங்கள்.
அதுதான் நாம் போய் விழ வேண்டிய இடம்.   நம்மைப் பிடித்திருக்கிற கர்மா, ஜன்மா போய் மோக்ஷ வீட்டைப் பிடிக்க வேண்டுமானால் பாதத்தை தான் பிடிக்க வேண்டும்.

தாமரையிலிருந்து தேன் வழிகிற மாதிரி, தேவியின் திருவடித் தாமரையிலிருந்து காருண்யாம்ருதம் வழிகிறது. அம்பாள் வழிபாட்டைப் பின்பற்றும் ஒவ்வொருவருக்குமே, அவளுடைய திருவடி ஸகல ஸெளபாக்யங்களையும் கொடுக்கிறது. திருவடி திருவையே தருகிறது!

அம்பிகையின் திருவடி இரவு பகல் என்று பாராமல் எங்கே எந்த பக்தர்களுக்கு அநுக்ரஹ காலம் வந்தாலும் அங்கே ஓடி அவர்களுக்கு அருள் செய்கிறது.  தேவியின் பாதத்தை பூஜிப்பவர்களுக்கு, தரித்திரம் நீங்கி, அளவற்ற ஸம்பத்துக்கள் வந்து சேரும். அவர்களுக்கு கர்ம வசத்தால் ஏற்படும் விபத்துக்களையும் நீக்கி விடுகிறது தேவியின் திருவடி.

வேதம் பிறந்தது தேவியின் பாத தூளிகளில் தான். பரமேஸ்வரன், விஷ்ணு, ப்ரம்மா முதலிய தேவர்கள் அம்பிகையின் திருவடியில் விழுந்து பாத தூளிகையை பூஜை செய்து தான் அவர்களின் தொழிலை (படைத்தல், காத்தல், அழித்தல்) செய்கிறார்கள்.  அத்திருவடி அஞ்ஞான இருட்டை போக்கி நல் ஞானத்தை கொடுக்குமாம். தேவியின் திருவடியின் மஹிமையை அளவிட முடியாதது.

அவள் காலடியில் விழுந்து சரணாகதி அடைந்தாலே போதும். அந்த சரணாகதியே மன இருளை அகற்றி மேதையாக்கி விடும். நுனி மரத்தில் உட்கார்ந்து அடிமரத்தை வெட்டும் அளவிற்கு அறியாமையால் கிடந்தவர் காளிதாசன். அவர் தேவியின் திருவடியை பிடித்து மாபெரும் கவியானார். அவர் பெற்ற அருளே இதற்கு சான்று.

அம்பிகையின் திருவடியை தியானிப்பவர்களுக்கு  தாரித்த்ரியம் நீங்கி, குபேரனுக்கு சமமாக ஆவார்கள்.

இவ்வாறு தேவியின் திருவடி தாமரையை பழிக்க செய்ததாக, வாக்தேவிகள் அம்பிகையை  "பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam