Sep 13, 2017

48. மஹா லாவண்ய ஷேவதி:

மஹா லாவண்ய ஷேவதி: - பேரழகுகளின் பொக்கிஷமானவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸



லலிதா


அம்பிகை அழகுக்கெல்லாம் அழகு. எல்லாரிடத்திலும், எல்லாப் பொருள்களிலும் உள்ள அழகெல்லாம் அம்பிகையின் அழகில் இருந்து தான் பெறப்படுகின்றது. அப்போதும் தேவியின் அழகு குறைவதில்லை. காரணம் அம்பிகை பூரணமானவள். பூரணத்திலிருந்து  எவ்வளவு எடுத்தாலும் குறைவு ஏற்படாது.

அம்பிகையின் அங்கங்களின் அழகை ஒவ்வொன்றாக விவரித்துப் பார்த்தாலும் முழுமையாக சொல்ல முடியவில்லை. அனைத்து அழகுகளும் சேர்ந்து ஓரிடத்தில் பொருந்தி குடியிருந்தால் எப்படி இருக்குமோ, அவ்வாறு அழகின் பொக்கிஷமாக, களஞ்சியமாக விளங்குகிறாள் லலிதாம்பிகை. நேராக ரூபத்தை வர்ணிக்க முடியாவிட்டாலும் ஒப்பிட்டாவது காட்டலாமா என்று பார்த்தால் அதற்கு உவமை காட்டும்படியாகவும் உலகத்தில் எதுவுமேயில்லை.

தேவியின் முழு ரூபத்தையும் எந்த கவிகளாலும் சொல்ல முடியவில்லை. பல பக்த கவிகள் தேவியை தர்சனம் செய்து தான் இருக்கிறார்கள். ஆனாலும் ஸம்பூர்த்தியாக எவரும் தன்னைப் பார்க்க விடாமல் ஏதோ கொஞ்சம், க்ஷண காலம்  மின்னல் மின்னுகிற மாதிரி தர்சனம் கொடுத்து விட்டு மறைந்து போய் விடுவாள். ஒரே பக்தியாக அவளிடமே மனசை அர்ப்பணித்தவர்களுக்கும் கூட அவளுடைய சரணாரவிந்தம், கடாக்ஷத்தைப் பொழியும் நேத்ரம், மந்தஸ்மிதம் செய்யும் திருவாய் என்றப்படி ஏதாவது ஒரு அவயம் தான் எப்போதும் கண்களில் கட்டி நிற்குமே தவிர கேசாதி பாதம் முழு ரூபமும் இல்லை.

ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் அம்பிகையை "படைக்கும் கடவுள்  பிரம்மாவினால் கூட உன்னுடைய பேரழகை வருணிக்க முடியவில்லை. தேவ கன்னியர்களும் உனது அழகை காண ஏங்குகின்றனர். சிவத்தினுடன் கலந்த அந்த வடிவம் பெரும் தவத்தாலும் அடைய முடியாது." என்று போற்றுகின்றார்.

ஆக எவ்வளவு வர்ணித்தாலும் அவளுடைய கேசம் முதல் பாதம் வரை உள்ள முழு உருவ அழகையும் எவராலும் இப்படித்தான் என்று கூற இயலாது. உலகில் உள்ள அனைத்து அழகுகளும் அம்பிகையிடம் இருந்து எடுத்தாலும் குறைவு படாத அழகு பொக்கிஷம் லலிதாம்பிகை என்பதை தான் வாக்தேவிகள் "மஹா லாவண்ய ஷேவதி:" என்று அம்பிகையை போற்றுகின்றனர்.

நாம் பார்க்கும் திசை தோறும் தேவியின் அவையங்களாக தெரியும் படியாகவும், அம்பிகையின் முழு ரூபத்தையும்,  த்யானம் செய்ய முயன்று, இறுதியில் சாயுஜ்ய பதவியை அடைவோம்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

No comments:

Post a Comment