Sep 8, 2017

45. பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா

பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா - தாமரையை மதிப்பிழக்க செய்யும் ஒளி நிறைந்த பாதங்களை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா



அம்பிகையின் இரு பாதங்களில் செவ்வொளி வீசுகிறது. அதனால் தாமரைப் பூக்கள் தேவியின் இரண்டு பாதத்திற்கு முன் அழகின்றி காணப்படுகிறது. தாமரையைக் காட்டிலும் அழகாகவும், ம்ருதுவாகவும், சிவப்பாகவும் இருக்கின்றது தேவியின் திருப்பாதங்கள்.
அதுதான் நாம் போய் விழ வேண்டிய இடம்.   நம்மைப் பிடித்திருக்கிற கர்மா, ஜன்மா போய் மோக்ஷ வீட்டைப் பிடிக்க வேண்டுமானால் பாதத்தை தான் பிடிக்க வேண்டும்.

தாமரையிலிருந்து தேன் வழிகிற மாதிரி, தேவியின் திருவடித் தாமரையிலிருந்து காருண்யாம்ருதம் வழிகிறது. அம்பாள் வழிபாட்டைப் பின்பற்றும் ஒவ்வொருவருக்குமே, அவளுடைய திருவடி ஸகல ஸெளபாக்யங்களையும் கொடுக்கிறது. திருவடி திருவையே தருகிறது!

அம்பிகையின் திருவடி இரவு பகல் என்று பாராமல் எங்கே எந்த பக்தர்களுக்கு அநுக்ரஹ காலம் வந்தாலும் அங்கே ஓடி அவர்களுக்கு அருள் செய்கிறது.  தேவியின் பாதத்தை பூஜிப்பவர்களுக்கு, தரித்திரம் நீங்கி, அளவற்ற ஸம்பத்துக்கள் வந்து சேரும். அவர்களுக்கு கர்ம வசத்தால் ஏற்படும் விபத்துக்களையும் நீக்கி விடுகிறது தேவியின் திருவடி.

வேதம் பிறந்தது தேவியின் பாத தூளிகளில் தான். பரமேஸ்வரன், விஷ்ணு, ப்ரம்மா முதலிய தேவர்கள் அம்பிகையின் திருவடியில் விழுந்து பாத தூளிகையை பூஜை செய்து தான் அவர்களின் தொழிலை (படைத்தல், காத்தல், அழித்தல்) செய்கிறார்கள்.  அத்திருவடி அஞ்ஞான இருட்டை போக்கி நல் ஞானத்தை கொடுக்குமாம். தேவியின் திருவடியின் மஹிமையை அளவிட முடியாதது.

அவள் காலடியில் விழுந்து சரணாகதி அடைந்தாலே போதும். அந்த சரணாகதியே மன இருளை அகற்றி மேதையாக்கி விடும். நுனி மரத்தில் உட்கார்ந்து அடிமரத்தை வெட்டும் அளவிற்கு அறியாமையால் கிடந்தவர் காளிதாசன். அவர் தேவியின் திருவடியை பிடித்து மாபெரும் கவியானார். அவர் பெற்ற அருளே இதற்கு சான்று.

அம்பிகையின் திருவடியை தியானிப்பவர்களுக்கு  தாரித்த்ரியம் நீங்கி, குபேரனுக்கு சமமாக ஆவார்கள்.

இவ்வாறு தேவியின் திருவடி தாமரையை பழிக்க செய்ததாக, வாக்தேவிகள் அம்பிகையை  "பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

No comments:

Post a Comment