Oct 28, 2017

52. சிவ காமேஸ்வராங்க ஸ்தா

சிவ காமேஸ்வராங்க ஸ்தா - காமேஸ்வரராகிய சிவனின் மடியில் வீற்றிருப்பவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha



அம்பிகையின் இருப்பிடம் இந்த நாமாவில் கூறப்பட்டிருக்கிறது. லலிதாம்பிகை காமேஸ்வரராகிய சிவனின் இடது தொடையில் அமர்ந்திருக்கிறாள். இவ்வாறு தேவி அமர்ந்திருப்பது சகுண வடிவம். சிவன் பிரகாச வடிவம் அதாவது ஒளியுடைய வடிவம். சக்தி சிவனுடைய  விமர்ச வடிவம்.  அதாவது ஒளியின் அசைவாக சக்தி இருக்கிறாள்.

தேவி லலிதாம்பிகை சிவனின் இடது தொடையில் அமர காரணம் இதயம் இடதுபுறத்தில் இருப்பதால் தான். இன்னும் சொன்னால், சிவனின் இதயமே அம்பிகை தான். 

சிவா என்றால் மங்களம் என்று பொருள். ஈஸ்வரன் என்றால் அனைத்தையும் ஆள்பவர் என்று பொருள். மேலும், காமம் என்றால் அழகு, ஆசை, மன்மதன் என்பனவற்றை குறிக்கும். காம என்றால் அறிவு என்றும் குறிக்கும். அறிவு என்பது சிவனுடைய ஒரு வடிவம். இதயத்தினாலும் மனதாலும் அறியப்படுவது அறிவு. சக்தி இதயமாக இருந்து நமக்கு ஞானமாகிய அறிவை வழங்குகிறாள். இந்த ஜகத்தை சிருஷ்டிக்க ஆசைப்பட்ட சிவம் தான் காமேஸ்வரன். அந்த ஆசையின் வெளிப்பாடாகத் தோன்றியவள் தான் காமேஸ்வரி. இந்த நாமத்தில் சகுண ப்ரம்மத்தின் அனைத்து தன்மைகளும் விளக்கப்படுகிறது.

சிவகாமேஸ்வனாக உள்ள தனது பர்த்தாவின் திருத்தொடையில் வீற்றிருக்கிறாள். இதை தான் வாக்தேவிகள் "சிவ காமேஸ்வராங்க ஸ்தா" என்று அம்பிகையை போற்றுகின்றனர். இவ்வாறு இந்த வடிவத்தில் லலிதாம்பிகையை தியானம் செய்வது உயர்ந்த முறை. 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Oct 21, 2017

51. ஸர்வாபரண பூஷிதா

ஸர்வாபரண பூஷிதா - எல்லாவித அணிகலன்களாலும் அலங்கரிக்கப் பெற்றவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


நவரத்தின கிரீடம், காதில் தாடங்கம், மூக்கில் மூக்குத்தி, பொன்னால் ஆன கேயூரம், கைகளில் மங்கள ஒலி எழுப்பும் வளையல்கள், பத்து விரல்களிலும் மோதிரம், கழுத்தில் தாலி, நவரத்தினம் பதித்த அட்டிகை, முத்து மாலைகள், பலவிதமான மாலைகள், ஓட்டியாணம், நவமணிகளால் ஆன சலங்கைகள் என்று பலவித ஆபரணங்கள் அணிந்திருக்கிறாள் லலிதாம்பிகை.

குறைவற்ற அழகான அங்க அமைப்பை உள்ள தேவிக்கு எல்லா ஆபரணங்களும் மேலும் அழகூட்ட முயற்சி செய்கின்றன. ஆனால் அவற்றால் முடியவில்லை. அம்பிகை அதை அணிந்ததால் ஆபரணங்கள் அழகு பெற்று கொண்டிருக்கிறது.

தேவியணியும் பல ஆபரணங்கள் சூடாமணி முதல் பாதாங்குலீயகம் வரை கல்பஸூத்ரம், காளிகா புராணம் முதலியவைகளில் கூறப்பட்டுள்ளன.
காளிகா புராணம், அன்னை 40 விதமான ஆபரணங்களை தரித்துக் காட்சிக் கொடுபாள் என்று கூறுகிறது. மேலும், மஹிஷாசுரனை சம்ஹரிக்க காளியை தேவர்கள் ஆவாகனம் செய்யும் போது, விஸ்வகர்மாவும் குபேரனும் அவளுக்கு பல ஆபரணங்களையும் கொடுத்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு தேவி சகலவிதமான ஆபரணங்களை அணிந்திருக்கிறாள் என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை " ஸர்வாபரண பூஷிதா " என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Oct 11, 2017

50. அநவத்யாங்கி

அநவத்யாங்கி - குற்றம் குறை ஒன்றும் இல்லாத அங்கங்களை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா



நிர்குண ப்ரம்மம் ( குணங்கள் இல்லாத ), சகுண ப்ரம்மம் ( குணங்கள் உடைய ) ஆகிய இரண்டும் தேவியின் வடிவம் தான். சகுண ப்ரம்மத்தை பற்றி அறியும் போது குணமும், வடிவமும் கூறப்படுகிறது. இங்கு சகுண ப்ரம்மமான தேவியின் உருவத்தை அறிகிறோம். ப்ரம்மம் பூரணமானவையாதலால், தேவியின் அங்கங்கள் அனைத்தும் பூரணமானவை. குறை இல்லாதவை.

அம்பிகை குறை காண இயலாத வடிவம் உடையவள். எல்லாவிதமான லக்ஷணங்களோடும் கூடிய அழகிய அவயங்களை கொண்டவள். தேவியின் அனைத்து அங்கங்களும் சாமுத்ரிகா லக்ஷண சாஸ்த்திரத்திற்கு அமைய பூரணம் ஆனவை.

அவள் அழகே உருவானவள். எந்த பக்ஷணமானாலும் அதற்குத் தித்திப்பைத் தருவது சர்க்கரை என்கிறமாதிரி, நாம் எங்கெங்கே எந்தெந்த அழகைக் கண்டாலும் அதையெல்லாம் அழகாக்கும் தாய் அவள்தான். பிரம்ம சக்தியான அவளுடைய பூரண அழகின் துளித்துளிதான் மற்ற அழகுகளிலெல்லாம் தெறித்திருக்கிறது. இப்படிப்பட்ட பூரண அழகில் எவ்வாறு குறை இருக்க முடியும்? அழகின் பூரணமே அம்பிகை தான்.

இவ்வாறு கேசாதி பாதம், பாதாதி கேசம் என்று எப்படி பார்த்தாலும் எந்த ஒரு அங்கத்திலும் குறை காண முடியாத அழகான வடிவம் உடையவள் லலிதாம்பிகை என்பதை தான் வாக்தேவிகள் "அநவத்யாங்கி" என்று அம்பிகையை போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

49. ஸர்வாருணா

ஸர்வாருணா - எல்லாம் சிவப்பாகவே இருப்பவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


Lalitha


பொதுவாக பரமாத்மாவுக்கு எந்த குணமோ, நிறமோ, வடிவமோ கிடையாது. அவ்வாறு எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மா தன்னை ஒரு சிறிய வடிவத்துக்குள் சுருக்கிக் கொண்டு உலகினை படைக்கிறார். இந்த உலகையும், அதில் வாழ ஆத்மாக்களையும் படைக்க பரமாத்மா பெண் வடிவமாக மாறிக்கொண்டது. அப்படி மாற்றி கொண்ட வடிவம் தான் லலிதாம்பிகை.

இவ்வாறு சிருஷ்டிக்கான செயல் வடிவில் தேவி வருகிறதால், அந்த வடிவில் வரும் போது அவள் கருமை நிறமாக வர முடியாது. காரணம் கருமை தாமஸத்திற்கான நிறம். தோன்றுவதற்கான நிறத்தில் வர வேண்டும் என்பதாலும், இந்த பூமியின் மீது வைத்த கருணையாலும் அம்பிகை அருண நிறத்தவளாக வந்தவள் தான் லலிதாம்பிகை.

மேலும், கருணையின் நிறம் சிவப்பு. அம்பிகையோ கருணையின் மொத்த உருவம். ஆக அம்பிகைக்கு எல்லாம் சிவப்பாகவே திகழ்கின்றது. சிவப்பு என்றால் அடர் சிவப்பல்ல; வெளிர் சிவப்பு. அதாவது சூரியன் உதிக்கின்ற நிறம். அடர் சிவப்பு சிறிது உக்கிரமானது. அது ராஜஸம் குடிக்கொண்ட நிறம். ராஜஸம் இருக்கும் போது மென்மையான தொடக்கம் இருக்க இயலாது. ஆனால் வெளிர் சிவப்பு தோற்றத்திற்கான நிறம்.

ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில்(93) "கருணா காசித் அருணா" என்கிறார். அதாவது, தேவியின் கருணை சிவந்த வர்ணமுள்ளதாகவும், அதனை சாதாரண அறிவால் அறிய முடியாததாகும் என்று கூறுகிறார்.

ஆக அம்பிகையின் திருமேனி, அவள் அணிந்துள்ள ஆடைகள், ஆபரணங்கள், பூமாலைகள், கற்பூர வீடீகம் போட்டு சிவந்த உதடுகள், அவள் வீற்றிருக்கும் சிம்ஹாசனம், ஆயிரம் இதழ் தாமரை, பட்டு மெத்தைகள், மேல் விரிப்புகள், பிரகாசம் என அனைத்தும் சிவப்பு நிறமானவைகள் தான்.

எல்லாம் சிவந்த நிறமாக லலிதாம்பிகை திகழ்வதால் தான் தேவியை வாக்தேவிகள்  "ஸர்வாருணா" என்று வர்ணிக்கின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam