Aug 22, 2017

44. நகதீதிதி ஸஞ்சந்ந நமஜ்ஜந தமோகுணா

நகதீதிதி ஸஞ்சந்ந நமஜ்ஜந தமோகுணா - பாத நகங்களின் காந்தியை கொண்டு தன்னை நமஸ்கரிப்பவர்களின் தாமஸத்தை போக்குபவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


Lalitha



அம்பிகையின் கால் நகங்கள் ஒளிப் பெற்று விளங்குகிறது. தேவர்களும் அசுரர்களும் வரம் வேண்டி ரத்தினங்கள் பதித்த, ஒளி பொருந்திய கிரிடங்களை உடைய தலையினை தேவியின் பாதங்களில் வைக்கும் போது,  தேவியின் பாத நகங்களில் இருந்து வெளிப்படும் ஒளியானது அந்த ரத்தினங்களின் ஒளியை மதிப்பிழக்க செய்கிறதாம். அந்த பாத நக ஒளியானது பக்தர்களின் தமோகுணத்தையும், அறியாமையும் போக்கும் வல்லமை உடையது.

அம்பிகையை யாரெல்லாம் நமஸ்காரம் செய்கிறார்களோ , அவர்களுக்கெல்லாம் அவள் ஞானத்தை அருள்கிறாள். தேவியை ப்ரம்மா, விஷ்ணு, சிவன், தேவாதி தேவர்கள் என்று எல்லோரும் நமஸ்கரிக்கிறார்கள்.

லலிதாம்பிகை வர - அபய கரங்களை கொண்டிருப்பதில்லை. இதை ஏற்கனவே சிந்தித்துள்ளோம். அவள் திருவடியில் இருக்கும் நகங்களே பக்தர்களின் விருப்பத்தை(வரம்) தருகிறது. அவர்களின் பயத்தையும்(அபயம்) போக்குகிறது.

ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் "தாயே! உன் கால் விரல்களின் நகங்கள்,  உன்னை வணங்க வருகின்ற வானவர்களின் மணிமுடிகளிலுள்ள மாணிக்கம்,  ரத்தினம்  போன்ற சாணைக் கற்களால் தீட்டப்பட்டு  இரும்பு கூர் போல்  இருக்கிறது." என்கிறார். மன்மதன் பரமேஸ்வரரை நோக்கி மலர் அம்புகள் விட்டு, அந்த ஐந்து பாணங்களும் உடையப்பட்டது. மன்மதன் தன்னிடமுள்ள ஐந்து பாணங்களைக் கொண்டு பரமேஸ்வரரை வெல்ல முடியாமல், மற்றொரு ஐந்து பாணங்களையும் தன்னுடைய தபோ மஹிமையால் தேவியின் கடாக்ஷத்தால் அவன் சம்பாதித்துக் கொண்டானோ என்று வர்ணிக்கிறார். அம்பிகையின் இரு பாதங்களில் உள்ள பத்து விதமான நகங்கள் மன்மதனுடைய பாணங்களின் நுனி பாகம் என்று கூறுகிறார் ஆதிசங்கரர்.

மேலும், தேவியின் பாத நகங்களின் காந்தியானது அநேக சந்த்ர கிரணங்கள் போல் விளங்குகிறது. சந்திரனைக் கண்டால் தாமரைப் புஷ்பங்கள் மூடிக் கொண்டுவிடும். அதுபோல தேவ ஸ்திரிகள்  அவர்களது கையை மூடி  தேவியை நமஸ்கரிக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது தேவ ஸ்திரிகளின் கைகள் பத்மத்தை போலவும், தேவியின் நகங்களின் காந்தி சந்திரன் போலவும், நககாந்தியாகிய சந்திரனைக் கண்டவுடன் தேவ ஸ்த்ரிகளுடைய கைகளாகிய பத்மம் மூடிக்கொண்டதோ என்று ஆதிசங்கரர் வர்ணிக்கிறார் தேவியின் நக காந்தியை.

அம்பிகையின் கால் நகங்களை த்யானிப்பதன் மூலம் அறியாமை என்னும் இருள் விலகும். இவ்வாறு தேவியின் பாத நகங்களின் காந்தியை "நகதீதிதி ஸஞ்சந்ந நமஜ்ஜந தமோகுணா" என்று வாக்தேவிகள் அம்பிகையை வர்ணிக்கின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

43. கூர்ம ப்ருஷ்ட ஜயிஷ்ணு ப்ரபதாந்விதா

கூர்ம ப்ருஷ்ட ஜயிஷ்ணு ப்ரபதாந்விதா - ஆமையின் முதுகு ஓட்டை வெல்லுகின்ற புறங்கால்களை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha
லலிதா


கூர்மம் என்றால் ஆமை.
அம்பிகையின் பாதத்தின் மேல்பாகம் பள்ளம் மேடு இல்லாமல், ஆமையின் முதுகின் வளைவுகளை விட அழகு வாய்ந்ததாக இருக்கின்றதாம்.

பொதுவாக ஆமையின் முதுகு எத்தகைய சுமையையும் தாங்கும் வலிமை உடையது. அதுபோல, அம்பிகையின் திருவடியின் மேல்பாகமானது அடியார்களின் சுமைகளை தாங்குகிறது. அதனால் தான் ஆமை ஓட்டினை ஒப்பிடுகிறார்கள் வாக்தேவிகள்.

ஆமையின் முதுகு ஓடு கடினமானதாக இருக்கும்.  தேவியின் புறங்கால்கள் ஆமையின் முதுகு போல வளைந்து இருந்தாலும், அவை மென்மையிலும் மென்மை வாய்ந்தவை. அடியார்களும், தேவர்களும், மும்மூர்த்திகளும் வணங்கும் திருவடி. எல்லையற்ற கருணையுடைய  அத்திருவடிகள் மிகவும் மென்மையாக உள்ளனவாகத்தான் இருக்கும்.

தேவியின் பாதங்களின் முன்பாகம் அவள் அடியார்களைக் காக்கின்றாள் எனும் புகழுக்கு உறைவிடமாகும். அடியார்களுக்கு ஏற்படும் விபத்துகளுக்கு இடமளிக்காமல் இருக்கிறது என்ற பெருமை அவற்றிற்கு உண்டு.

ஆனால் ஆதிசங்கரரோ அம்பிகையின் புறங்கால்களை ஆமையின் ஓட்டோடு ஒப்பிட கூட மறுக்கிறார். காரணம், ஆமை ஓட்டின் கடினத்தன்மை. அவர் சௌந்தர்யலஹரியில் "தாயே !  பக்தர்களுக்கு  உயர்வைகொடுக்கக்  கூடியதும் ,  அவர்களது துன்பங்களைப்  போக்கக்கூடியதுமான, பெருமையுடைய  உன் மென்மையான  பாதநுனியைப்  பிடித்து ,  உன் பாதத்தின் மென்மையை அறிந்த சிவனும் அளவற்ற ஆசையுடன் திருமணநாளன்று, எப்படித்தான் கடினமான  கருங்கல் அம்மிமீது வைத்தாரோ ?  கவிகளும்  இந்த மென்மையான பாதங்களின் மேல்பாகத்தை ஆமை முதுகு ஓட்டிற்கு  உவமையாகக்  எப்படித்தான்  கூறினாரோ" என்று கூறுகிறார். இதில் இருந்து இந்த லலிதா சகஸ்ரநாமம் சௌந்தர்யலஹரியை விட பழமையானது என்பது புலப்படுகிறது.

இவ்வாறு தேவியின் பாதத்தின் மேல்பாகமானது ஆமையின் முதுகு ஓட்டை விட அழகானது என்பதை "கூர்ம ப்ருஷ்ட ஜயிஷ்ணு ப்ரபதாந்விதா" என்று வாக்தேவிகள் அம்பிகையை போற்றுகின்றனர். மேலும் தேவியின் திருவடியின் மேல் பகுதியான புறங்கால்களை த்யானம் செய்வதால் புலனடக்கம் உண்டாகும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

42. கூடகுல்பா

கூடகுல்பா - வெளியில் தெரியாமல் மறைந்திருக்கும் அழகிய உருண்ட கணுக்கால்களை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா


அம்பிகையின் கணுக்கால்களின் எலும்பு, மேலே முட்டாகத் தெரியாமல், சற்று சதை பிடிப்பு உள்ளனவாய் இருக்கின்றதாம்.
கணுக்கால்கள் வலுவின்றி மெலிந்து விடாமல் சதைகளால் மூடப்பட்டு உருண்டு அழகுடன் விளங்குகிறது.

அன்னையின் திருவடியை அடியார்கள் யாவரும் நன்றாக கட்டியாக பிடித்துக் கொள்வதற்கு ஏற்ப, அவள் திருவடியில் உள்ள கணுக்கால் குறைவின்றி, நிறைவாக சதைப் பகுதியாகவே அழகாகக் காட்சிக் கொடுக்கிறது.

மேலும், பக்தன் தன் காலை பிடிக்கும் போது  தன்னுடைய எலும்பை பிடித்தால் அது வலிக்கும் எனக் கருதி, சதையாக கொண்டுள்ளாள். இதில் அன்னையின் கருணை மறைந்துள்ளது. அதுவே, உருண்டையாக அழகாக சிவந்து இருக்கிறது என்று நினைக்கிறேன்.

அம்பிகையின் கணுக்கால்களை தியானம் செய்வதன் மூலம் நிறைவான வாழ்க்கைக் கிட்டும்.

இவ்வாறு வாக்தேவிகள் அம்பிகையை “கூடகுல்பா "என்று கணுக்காலினை வர்ணிக்கின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Aug 12, 2017

41. இந்த்ர கோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

இந்த்ர கோப  பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா - இந்த்ர கோபங்கள் என்ற கார்காலத்து பூச்சிகள் மொய்க்கப் பெற்ற, மன்மதனின் அம்பாறாத் தூணிகள் போல் ப்ரகாசிக்கும் முன்னங்கால்களை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha



அம்புகளை வைக்க அம்பறாத்தூணி இருக்கும். அம்பறாத்தூணியானது அம்புகளை வைக்க தகுந்தாற் போல் மேலே பருத்தும், கீழே சிறுத்தும் காணப்படும். மன்மதன், அம்பிகை கையில் உள்ள அதே மலர் அம்புகளை தான் வைத்திருக்கிறான். அந்த மலர் அம்புகளை வைக்க உதவும் அம்பறாத்தூணியாக தேவியின் திருக்கால்கள் இருக்கின்றதாம்.

இந்த்ர கோபங்கள் என்பது மழைக்காலத்தில் பூமியில் உற்பத்தியாகிக் காலை நேரத்தில் அழகாகத் தரையில் ஊர்ந்துக் கொண்டிருக்கும் பூச்சிகள். அந்த பூச்சிகள் மன்மதனின் அம்பாறத் தூணிகளில் மொய்த்துக் கொண்டிருக்கிறதாம். அதாவது, மலர்கள் எங்கு இருக்கிறதோ அங்கு வண்டுகள் மொய்ப்பது போல, தேவியின் திருக்கால்களான அம்பறாத்தூணியில் இந்த்ர கோபங்கள் என்னும் பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருக்கின்றதாம்.

மேலும், இதை ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் "தாயே!  உன்னுடைய கனுக்கால்கள் பரமசிவனை வெற்றி  கொள்வதற்காக, மன்மதனால்  தயாரிக்கப்பட்ட  அம்பறாத்தூணிபோல்  தோன்றுகிறது" என்கிறார்.

அதாவது, மன்மதன் சிவபெருமானிடம் தோற்றுவிட்டக் காரணத்தால், ஈசனை வெல்ல சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அம்பிகை தன் குழந்தைகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாள். அவ்வாறு குழந்தையான மன்மதன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தன்னுடைய திருக்கால்களையே அவனுக்கு அம்பறாத்தூணியாகக் கொடுத்திருக்கிறாள். அதை மன்மதன் தனது படைக்கலமாகக் கொண்டு ஈசனை வென்று விட்டான் என்று வர்ணிக்கின்றார்.

இவ்வாறு கார்காலத்து பூச்சிகள் மொய்க்கும் அம்பறாத்தூணியாக அம்பிகையின் முன்னங்கால்கள் இருக்கின்றது என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "இந்த்ர கோப  பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

40. மாணிக்ய மகுடாகார ஜாநுத்வய விராஜிதா

மாணிக்ய மகுடாகார  ஜாநுத்வய   விராஜிதா - மாணிக்க மகுடம் போன்ற முழங்கால் சில்லுகளை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


அம்பிகையின் சில்லுகள் சற்றுக் கடினமாகவும், சிவந்தும் காணப்படுகிறது. அவை, காலின் நடுவில் மாணிக்கத் மகுடத்தை சூட்டியது போல் தோன்றுகிறதாம்.

அம்பிகை மஹா பதிவ்ரதை. அதனால் பரம பணிவோடு பதியான காமஸ்வரனை விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணிக் கொண்டே இருப்பவள். பெண்கள் காலை மடித்து காலின் நடு பாகம் பூமியில் படுகிற மாதிரி தான்  நமஸ்கரிப்பது வழக்கம். அப்படி ஓயாமல் ஒழியாமல் அம்பாளுடைய அந்த பாகம் பூமியில் உராய்ந்து காய்ப்புக் காய்த்துப் போய் தான் முட்டியானது கெட்டி பாகமாக ஆகிவிட்டதாம். அதனால், அந்த முழங்கால் சிவந்து மாணிக்க கல் போன்று ஆகிவிட்டதாம்.

இதை ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் “பத்யு: ப்ரணதி கடிநாப்யாம்" அதாவது  "தாயே உன்  முழங்கால்கள்    உருண்டையாகவும், உன்  கணவனாகிய  பரமசிவனை ,  அடிக்கடிவணங்குவதால்  சற்று கடினமாகவும் உள்ளது அந்த முழங்கால்கள்" என்று  அம்பிகையை வர்ணிக்கிறார்.

வேதத்தை நமக்கு தந்ததும் அம்பிகைதான். அவ்வழி நடந்து காட்டவே , காலின் மத்ய பாகம் முட்டி என்பது கெட்டிப்படும் அளவுக்கு, பத்னி தர்மமாகப் பதியை நமஸ்கரிக்கிறாள்.

இவ்வாறு மாணிக்க கல்லால் செய்யப்பட்ட தொப்பிப்போல் உள்ளது அம்பிகையின் முழங்கால் சில்லுகள் என்பதை தான் வாக்தேவிகள் "மாணிக்ய மகுடாகார ஜாநுத்வய விராஜிதா" என்று தேவியை போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam




39. காமேச ஜ்ஞாத சௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா

காமேச ஜ்ஞாத சௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா - காமேசுவரரால் அறியப்பெற்ற அழகையும், ம்ருது தன்மையையும் உடைய இரு தொடைகளை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


Lalitha


அம்பிகையின் தொடைகளின் அழகையும் ம்ருது தன்மையையும் அவளின் கணவனான காமேஸ்வரருக்கு மட்டுமே தெரியுமானது. வேறு எவராலும் அதை அறியமுடியாதாம்.

தேவியின் தொடையானது யானையின் துதிக்கைப் போல் மேல் பெருத்து வரவர சிறியதாக விளங்கி வருகிறதாம். இதை
ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் "அம்மா !  வேதநாயகியே ! உன் தொடைகள் இரண்டும்,  யானைகளின் துதிக்கைகளையும் தங்கமயமான வாழைமரத் தண்டுளையும் விட ,  மிக அழகாக இருக்கின்றன" என்று போற்றுகின்றார்.

மேலும் தேவியின் தொடைகளை த்யானிப்பதன் மூலம் மென்மையும், சௌந்தர்யமும் கிட்டும். இவ்வாறு ல்ஜகதாம்பிகையின் தொடையின் சௌந்தர்யத்தை தான் வாக்தேவிகள் "காமேச ஜ்ஞாத சௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா"  என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam




38. ரத்ன கிங்கிணி காரம்ய ரச நாதாம பூஷிதா

ரத்ன கிங்கிணி காரம்ய ரச நாதாம பூஷிதா - ரத்தின சலங்கையுடன் விளங்கும் அழகிய அரைஞான் அணிந்தவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


பெண்கள் இடையில் அணியும் அணிகலனுக்கு ஒட்டியாணம், மேகலை என்றெல்லாம் கூறுவர். அம்பிகையின் இடையில் உள்ள ஒட்டியாணம் தங்க மயமான கொடிகளைக் கொண்டது. இதில் அழகிற்காக மணிகளும் இரத்தினங்களும் தொங்கவிடப்பட்டிருக்கின்றது.

இந்த ஒட்டியாணத்தின் மணிகள் அசையும் போது கிண்கிண் என்ற இனிய ஓசையை எழுப்பும். இதனாலயே இவைகள் கிண்கிணி மணிகள் என்று சொல்லப்படுகின்றன.

ஆதிசங்கரரும் சௌந்தர்யலஹரியில் அம்பிகையை " க்வணத் காஞ்சி தாமா - சப்திக்கின்ற தங்க சலங்கையோடு கூடிய ஒட்டியாணத்தால் அலங்கரிக்கப்பட்டவள்" என்று போற்றுகின்றார். மேலும் தேவியின் ஒட்டியாணத்தை த்யானிப்பதன் மூலம் ஜீவாத்மா பரமாத்வோடு இணையும் வாய்ப்பு கிட்டும்.

இதனை தான் வாக்தேவிகள் அம்பிகையை  " ரத்ன கிங்கிணி காரம்ய ரச நாதாம பூஷிதா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam



37. அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீதடீ

அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீதடீ - சிவப்பு பட்டாடையால் ப்ரகாசிக்கின்ற இடை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா

அருணம் என்றாலே சிவப்பு. குசும்ப செடியின் சாற்றினால் பட்டாடைகளுக்கு சாயமேற்றுவது பழங்காலத்து முறையாகும். அவ்வாறு சாயமேற்றிய ஆடையை கௌஸும்ப வஸ்திரம் என்பர்.

அம்பிகை  தனது இடையினை சுற்றி அவ்வாறு இயற்கை பொருளால் சாயமேற்றிய சிவப்பு நிற பட்டாடையை உடுத்தியிருக்கிறாள். மேலும் அம்மையோடு சம்பந்தப்பட்ட  எல்லாமே சிவப்பு நிறத்துடனே உள்ளது.  ஏற்கனவே சொன்னது போல் சிவப்பு  கருணை, தயையின் அடையாளம். அவளே கருணையின் வடிவம். ஆகவே தான் அவள் 'ஶ்ரீ மாதா'என்று அறியப்படுகிறாள். அவளது முத்தொழிலான படைத்தல்,  காத்தல், அழித்தல் மூன்றுமே கருணையை அடிப்படையாக கொண்டவை.

லலிதாஸஹஸ்ர நாமம் வாக்தேவிகளான வசினி, காமேஸ்வரி, மோதினி, விமலே, அருணா, ஜயினி, ஸர்வேஸ்வரி, கௌலினி ஆகிய எட்டு பேர்களால் ஆக்கப்பட்டது. அருணா என்ற வாக்தேவி அம்பிகையின் இடையினை சுற்றியுள்ள சிவப்பு பட்டாடையால் குறிக்கப்படுகிறாள்.

 மேலும் அருணன் என்றால் சூரியன் . சூரியனின் நிறம் சிவப்பு. சூரிய ஒளி எல்லா ஜீவன்களுக்கும் ஜீவச் சக்தியை தருகிறது. ஆக, சிவப்பு நிறம் ஜீவசக்தியைக் குறிக்கிறது.

இதனை தான் வாக்தேவிகள் அம்பிகையை "அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீதடீ" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

36. ஸ்தநபார தலந்மத்ய பட்டபந்த வலித்ரயா

ஸ்தநபார தலந்மத்ய  பட்டபந்த  வலித்ரயா - ஸ்தனங்களின் கனத்தினால் இடை ஒடிந்து விடாமல் காப்பதற்குக் கட்டிய முப்பட்டைகளைப் போல் விளங்கும் மூன்று மடிப்புகளை வயிற்றில் உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா


பெண்களின் வயிற்றில் மூன்று மடிப்புகள் காணப்படும். நெற்றி, கழுத்து, இடை ஆகிய பகுதிகளில் மூன்று கோடுகள் காணப்படுவது சாமுத்ரிகா லட்சணமாகும்.
இதன்படி அம்பிகையின் இடையில் மூன்று கோடுகள் காணப்படும்.

அம்பிகையின் ஸ்தன பாரத்தினால் மடியும் இடையினை தாங்கி கொள்வதற்கு, தங்கத்தினால் ஆன பட்டி அவளது வயிற்றில்  மூன்று மடிப்புகளை உருவாக்குகிறது போல் இருக்கிறது. கம்பு விரிசல் விட்டால், உடைந்து விடாமல் இருக்கக் கயிற்றால் கட்டு போடுவதுண்டு. அது போலவே அம்பிகையின் மெல்லிய இடை உடையாமல் இருக்க மூன்று கட்டுகள் போடப்பட்டது போல் விளங்குகிறது.

மேலும் ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் "தேவீ !  இந்த  ஸ்தனசுமையினால் உன்  இடுப்பு  ஒடிந்துவிழுந்துவிடப் போகிறதே என்று, உன் இடுப்பை வள்ளிக்  கொடிகளால் மூன்று சுற்றாக  சுற்றி  இருப்பது போல் தோன்றுகிறது" என்று வர்ணிக்கின்றார்.

இந்த நாமத்தின் உட்கருத்து, அம்பிகையின் எல்லையற்ற கருணையை அவளது மார்பின் பாரமாக உருவகப் படுத்தப்படுகிறது. மூன்று மடிப்புகள் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை குறிப்பிடுகிறது. அவளுடைய கருணைக்கான நேரம் மற்ற தொழில்களைவிட அதிகமானது. அவள் ஜகன் மாதா. அவளுடைய கருணையே மற்றதை விட அதிகம்.

இதனை தான் வாக்தேவிகள் அம்பிகையை "ஸ்தநபார தலந்மத்ய  பட்டபந்த  வலித்ரயா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam


35. லக்ஷ்ய ரோம லதா தாரத ஸமுன்னேய மத்யமா

லக்ஷ்ய ரோம லதா தாரத ஸமுன்னேய மத்யமா - காணப்படுகின்ற  ரோம வரிசையான கொடிக்கு ஆதாரமானது இருக்க வேண்டுமென்று அநுமானம் செய்து அறியக்கூடிய இடையை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
லலிதா


பெண்களின் இடை மிகவும் மெலிந்து சிறியதாக இருப்பது சாமுத்ரிகா லட்சணம்.  அம்பிகையின் இடை கொடி போன்ற ரோம வரிசையினை தாங்கும் இடமாகும்.

அந்த இடை மெல்லியதாக இருக்கிறதா? இல்லையா? என்று எண்ணத்தக்க நிலையில் உள்ளது. ஆனாலும் கொடி போன்ற ரோம வரிசைகள் தொடங்கும் இடம் ஒன்று உண்டு தானே. அதுவே இடை.  அந்த இடை கண்ணுக்குத் தெரியாமல் ஊகித்து அறியும் படி அவ்வளவு மெலிந்த சிறுத்த இடையாய் இருக்கின்றதாம்.

ஆத்மா சூட்சுமமானதும் கண்ணுக்குப் புலப்படாததும் ஆகும். ஆத்மாவை தியானத்தால் மட்டுமே உணரக்கூடியதாகும். இதுவே இந்த நாமத்தின் தாத்பர்யம்.

இதனை தான் வாக்தேவிகள் அம்பிகையை "லக்ஷ்ய ரோம லதா தாரத ஸமுன்னேய மத்யமா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

34. நாப்யா லவால ரோமாலி லதாபல குசத்வயீ

நாப்யா லவால ரோமாலி லதாபல குசத்வயீ - நாபி என்ற பாத்தியிலிருந்து முளைத்தெழுந்த கொடி போன்ற மெல்லிய ரோம வரிசையின் உச்சியில் பழுத்த பழங்களை ஒத்த இரு ஸ்தனங்களை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


Lalitha



சாமுத்ரிகா லட்சணப்படி பெண்களின் நாபியிலுருந்து, மேல் நோக்கி மெல்லிய ரோம வரிசைகள் காணப்படும். அவ்வரிசைகள் மார்பகங்களின் தொடக்கத்தில் முடியும்.

அவ்வாறே, அம்பிகையின் வயிற்றிலுள்ளக் கொப்புழானது குழியாக வட்டமான அழகிய பாத்தியைப் போல உள்ளது. அதிலிருந்து நெஞ்சுக் குழிவரை சன்னமாக நீண்டிருக்கும் மெல்லிய ரோம வரிசையானது அழகிய கொடியைப் போல காட்சி அளிக்கிறது. அவ்வளவு நுண்ணிய இடையை கொண்டவள். அம்பிகையின் ஸ்தனங்கள் இரண்டும் அக்கொடியின் உச்சியில் பழுத்த இரு பழங்களைப் போல இருக்கின்றது.

மேலும், குண்டலினி யோக சாஸ்திரப்படி, நாபி மணிபூரகச் சக்கரமாகவும், ஹ்ருதயம் அநாகத சக்கரமாகும். ஹ்ருதய சக்கரத்தினை தியானிக்கும் போது குண்டலினி நாபியில் இருந்து எழுந்து வந்து அநாகதத்தில் மலர்வதாக தியானிக்க வேண்டும்.

இதனை தான் வாக்தேவிகள் அம்பிகையை "நாப்யா லவால ரோமாலி லதாபல குசத்வயீ" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

33. காமேச்வர ப்ரேமரத்ந மணிப்ரதிபண ஸ்தநீ

காமேச்வர ப்ரேமரத்ந மணிப்ரதிபண   ஸ்தநீ - ரத்தினக் கலசம் போன்ற தனது ஸ்தனங்களைக் கொடுத்து காமேஸ்வரனின் ப்ரேமையை விலைக்கு வாங்கியவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா


காமேஸ்வரனின் அன்பை பெறுவதற்கு தனது இரு ஸ்தனங்களையும் அவருக்கு அளித்தவள் அம்பிகை. ஈசனின் நெஞ்சம் வலியது. காமனது வில்லுக்கு மயங்காத அவ்வலிய நெஞ்சை எளிதில் வாங்கி விட முடியாது. அவரது அன்பு என்னும் ஒரு ரத்தினத்தை பெறுவதற்கு தேவி தனது இரு ரத்தினமான திருமுலைகளைக் கொடுத்தாள்.

அம்பிகையின் திருமுலைகள் வெறும் மாம்ஸத்தால் ஆன கவர்ச்சி யூ ட் டு ம் அங்கம் அல்ல. திவ்ய மங்கள ரூபத்தில் பரஞானம், அபரஞானம் என்னும் இரண்டு வகை ஞானங்களே அவளது திருமுலைகளாக அமைந்துள்ளது.

அவ்விரு ஞானங்களையும் சிவார்ப்பனமாகக் கொடுத்து அவரது அன்பு என்னும் ரத்தின மணியை அம்பிகை வாங்கினாள் என்பதே உட்கருத்து.

அதாவது ஜகதாம்பிகையின் அன்புக்கு பாத்திரமான பக்தர்கள் செய்யும் பக்திக்கு பலனாக அருளினை இருமடங்காக தருகிறாள். தேவியின் திருமார்பை தியானம் செய்ய ஞானம் உண்டாகும்.

இதனை தான் வாக்தேவிகள் அம்பிகையை " காமேச்வர ப்ரேமரத்ந மணிப்ரதிபண   ஸ்தநீ " என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam


32. ரத்ன க்ரைவேய சிந்தாக லோலா முக்தா பலான்விதா

ரத்ன க்ரைவேய சிந்தாக லோலா முக்தா பலான்விதா - அசைகின்ற முத்துக்களுடன் கூடிய ரத்தினப்பதக்கமும் பொருந்திய அட்டிகை அணிந்தவள்.

Lalitha


க்ரீவம் என்றால் கழுத்து. க்ரைவேயம் என்றால் கழுத்தில் அணியும் ஆபரணம். அம்பிகை ரத்தின அட்டிகையும், முத்து மாலைகளையும் அணிந்திருக்கிறாள். இந்த ஆபரணங்கள் தேவியின் கழுத்தில் அசைந்துக் கொண்டிருக்கின்றன.

அம்பிகையின் முழு உருவத்தையும், அதாவது தலை முதல் பாதம் வரை த்யானிக்க முடியாத ஆற்றல் அற்ற கீழான பக்தர்கள் லோலா எனப்படுவர்.
தேவியை தலை முதல் பாதம் வரை த்யானிக்கும் ஆற்றல் பெற்ற உயர்ந்த பக்தர்கள் முக்தா எனப்படுவர்.

லலிதாம்பிகை இந்த லோலாக்களையும், முக்தாக்களையும் பதக்கங்களாகவும், முத்து மாலைகளாகவும்  அணிந்திருக்கிறாள்.  இந்த லோலாவும் முக்தாவும் அவரவர் தகுதிக்கு தகுந்தாற் போல் பலனை பெறுவர்.

அணிகலன்களை அலங்காரத்துக்காக  மட்டுமில்லாமல் நீதிகளை அறிவுறுத்தவும் அணிகிறாள் அம்பிகை. அதாவது அம்பிகை அணியும் முத்துக்களாக நாம் மாற வேண்டும் என்ற குறிக்கோள் நமக்குள் ஏற்பட வேண்டும். தேவியினிடத்தில்  அசைந்து கொண்டிருக்கும் ஆபரணம் நம் மனதினை குறிக்கும். தேவியை வணங்கும் போது நம் மனதில் எந்த ஒரு சலனமும் தோன்றாமல் மனதினை அவள் பக்கம் செலுத்த முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறு அம்பிகை ரத்னம் மற்றும் முத்து பதித்த ஆபரணங்களை அணிந்திருக்கிறாள் என்பதை வாக்தேவிகள் " ரத்ன க்ரைவேய சிந்தாக லோலா முக்தா பலான்விதா" என்று போற்றுகின்றனர்.

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

31. கநகாங்கத கேயூர கமநீய புஜாந்விதா

கநகாங்கத  கேயூர  கமநீய  புஜாந்விதா - பொன்னால் ஆன தோள் வளைகளை அணிந்தவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா



லலிதாம்பிகை சதுர் புஜங்கள் கொண்டவள். நான்கு தோள்கள். தோள்களில் தோள்வளைகள் அழகு செய்கின்றன. தேவி தன்னுடைய தோள்களிலும், புஜங்களிலும் அங்கதம் மற்றும் கேயூரத்தை அணிந்திருக்கிறாள்.

பொதுவாக போர்க்களம் புகுந்து எதிரியுடன் போரிடும் போது, கவசமாக அணியும் பாதுகாப்பு அணிகலன் அங்கதம் எனப்படும். தோள்களிலும், புஜங்களிலும் அழகூட்ட அணிவது கேயூரம் எனப்படும்.

 லலிதாம்பிகை பண்டாசுரனுடன் போரிடும் போது அங்கதம், கேயூரத்தையெல்லாம் அணிந்திருந்தாள். இந்த இரண்டு ஆபரணங்களும் தங்கத்தால் ஆனவை. இவை இரண்டும் வேறு வேறு வடிவாக  இருந்தாலும் ஒரே பொருளான தங்கத்தால் ஆனது. அது போல தான் உயிரினங்களின் தோற்றம் வேறானாதாக இருந்தாலும் அவற்றின் உள்ளிருக்கும் ப்ரம்மம் ஒன்றே என்பதே தாத்பர்யம்.

அம்பிகை இவ்வாறு பொன்னால் ஆன அங்கதம் மற்றும் கேயூரத்தை அணிந்திருக்கிறாள் என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "கநகாங்கத  கேயூர  கமநீய  புஜாந்விதா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

30. காமேஸ பக்த மாங்கல்ய ஸூத்ர ஸோபித கந்தரா

காமேஸ பக்த மாங்கல்ய ஸூத்ர ஸோபித கந்தரா - காமேஸ்வரர் கட்டிய மங்கல நாணுடன் ப்ரகாசிக்கும் கழுத்தினை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


அம்பிகையின் கழுத்து பளபளக்கிறது. அதன் கூடுதலான பளபளப்புக்கு காரணம் காமேஸ்வரராகிய சிவனார் கட்டிய திருமாங்கல்யமாம்.

மாங்கல்யம் கட்டும் பழக்கம் வேத காலத்தில் இருந்ததில்லை. எனினும் தென்னாடுடைய சிவன் தாலி கட்டியே திருமணம் முடித்தார்.

ஆதிசங்கரர்  "அம்மா, உன் கழுத்திலுள்ள முன்று ரேகைகளும், சிவன் உனக்கு  திருமண நாள் அன்று  அணிவித்த  மங்கள  சூத்திரத்தின்  அடையாளம்  போலும்" என்று  கூறியிருக்கிறார்.

அம்பிகை சிவனார் கட்டிய மங்கள நாணை அணிந்திருக்கிறாள். அதனால் மூன்று கோடுகள் உண்டானதாம். சாமுத்ரிகா லட்சண படி நெற்றி, கழுத்து, இடை ஆகியவற்றில் மூன்று கோடுகள் இருந்தால் அது அவர்களுடைய பாக்யங்களை குறிக்கும்.

நெற்றியில் மூன்று கோடுகள் இருந்தால் அது பரம சௌபாக்யத்தை தரவல்லது என்பதால், மூன்று விதமான ரேகைகளும் தேவியினுடைய கழுத்தில் காணப்படுகிறது என்பது ஓர் ஆச்சர்யம் ஆகாது. ஏனெனில் தேவியின் ஸ்வரூப லட்சணங்களை கொண்டு தான் சாமுத்ரிகா லட்சணம் அமைந்துள்ளது. அம்பிகை நித்ய சுமங்கலி. அவளுடைய மாங்கல்யத்தை த்யானித்து வழிபட மங்களங்கள் கூடும்.

காமேஸ்வரர் கட்டிய மங்கள நாணுடன் விளங்குகிறாள் என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "காமேஸ பக்த மாங்கல்ய ஸூத்ர ஸோபித கந்தரா" என்று போற்றுகின்றனர்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Aug 5, 2017

29. அநாகலித ஸாத்ருஸ்ய சிபுகஸ்ரீ விராஜிதா

அநாகலித ஸாத்ருஸ்ய சிபுகஸ்ரீ விராஜிதா - உவமையற்ற அழகு வாய்ந்த முகவாய் கட்டின் எழிலுடன் விளங்குபவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா



சிபுகம் என்றால் முகவாய். அம்பிகையின் முகம் கண்ணாடி என்றால் அவளுடைய முகவாய் அதன் கைப்பிடி என்று ஆதிசங்கரர் கூறுகிறார்.

அம்பிகையின் முகவாய் கட்டையின் அழகிற்கு இணையாக உவமை சொல்வதற்கு தகுந்த பொருள் உலகில் ஒன்றுமே இல்லையாம். அவ்வளவு அழகு வாய்ந்த முகவாய் கட்டையை உடையவள் என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை  "அநாகலித ஸாத்ருஸ்ய சிபுகஸ்ரீ விராஜிதா" என்று போற்றுகின்றனர்.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam