Aug 12, 2017

37. அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீதடீ

அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீதடீ - சிவப்பு பட்டாடையால் ப்ரகாசிக்கின்ற இடை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா

அருணம் என்றாலே சிவப்பு. குசும்ப செடியின் சாற்றினால் பட்டாடைகளுக்கு சாயமேற்றுவது பழங்காலத்து முறையாகும். அவ்வாறு சாயமேற்றிய ஆடையை கௌஸும்ப வஸ்திரம் என்பர்.

அம்பிகை  தனது இடையினை சுற்றி அவ்வாறு இயற்கை பொருளால் சாயமேற்றிய சிவப்பு நிற பட்டாடையை உடுத்தியிருக்கிறாள். மேலும் அம்மையோடு சம்பந்தப்பட்ட  எல்லாமே சிவப்பு நிறத்துடனே உள்ளது.  ஏற்கனவே சொன்னது போல் சிவப்பு  கருணை, தயையின் அடையாளம். அவளே கருணையின் வடிவம். ஆகவே தான் அவள் 'ஶ்ரீ மாதா'என்று அறியப்படுகிறாள். அவளது முத்தொழிலான படைத்தல்,  காத்தல், அழித்தல் மூன்றுமே கருணையை அடிப்படையாக கொண்டவை.

லலிதாஸஹஸ்ர நாமம் வாக்தேவிகளான வசினி, காமேஸ்வரி, மோதினி, விமலே, அருணா, ஜயினி, ஸர்வேஸ்வரி, கௌலினி ஆகிய எட்டு பேர்களால் ஆக்கப்பட்டது. அருணா என்ற வாக்தேவி அம்பிகையின் இடையினை சுற்றியுள்ள சிவப்பு பட்டாடையால் குறிக்கப்படுகிறாள்.

 மேலும் அருணன் என்றால் சூரியன் . சூரியனின் நிறம் சிவப்பு. சூரிய ஒளி எல்லா ஜீவன்களுக்கும் ஜீவச் சக்தியை தருகிறது. ஆக, சிவப்பு நிறம் ஜீவசக்தியைக் குறிக்கிறது.

இதனை தான் வாக்தேவிகள் அம்பிகையை "அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீதடீ" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

No comments:

Post a Comment