Aug 22, 2017

43. கூர்ம ப்ருஷ்ட ஜயிஷ்ணு ப்ரபதாந்விதா

கூர்ம ப்ருஷ்ட ஜயிஷ்ணு ப்ரபதாந்விதா - ஆமையின் முதுகு ஓட்டை வெல்லுகின்ற புறங்கால்களை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha
லலிதா


கூர்மம் என்றால் ஆமை.
அம்பிகையின் பாதத்தின் மேல்பாகம் பள்ளம் மேடு இல்லாமல், ஆமையின் முதுகின் வளைவுகளை விட அழகு வாய்ந்ததாக இருக்கின்றதாம்.

பொதுவாக ஆமையின் முதுகு எத்தகைய சுமையையும் தாங்கும் வலிமை உடையது. அதுபோல, அம்பிகையின் திருவடியின் மேல்பாகமானது அடியார்களின் சுமைகளை தாங்குகிறது. அதனால் தான் ஆமை ஓட்டினை ஒப்பிடுகிறார்கள் வாக்தேவிகள்.

ஆமையின் முதுகு ஓடு கடினமானதாக இருக்கும்.  தேவியின் புறங்கால்கள் ஆமையின் முதுகு போல வளைந்து இருந்தாலும், அவை மென்மையிலும் மென்மை வாய்ந்தவை. அடியார்களும், தேவர்களும், மும்மூர்த்திகளும் வணங்கும் திருவடி. எல்லையற்ற கருணையுடைய  அத்திருவடிகள் மிகவும் மென்மையாக உள்ளனவாகத்தான் இருக்கும்.

தேவியின் பாதங்களின் முன்பாகம் அவள் அடியார்களைக் காக்கின்றாள் எனும் புகழுக்கு உறைவிடமாகும். அடியார்களுக்கு ஏற்படும் விபத்துகளுக்கு இடமளிக்காமல் இருக்கிறது என்ற பெருமை அவற்றிற்கு உண்டு.

ஆனால் ஆதிசங்கரரோ அம்பிகையின் புறங்கால்களை ஆமையின் ஓட்டோடு ஒப்பிட கூட மறுக்கிறார். காரணம், ஆமை ஓட்டின் கடினத்தன்மை. அவர் சௌந்தர்யலஹரியில் "தாயே !  பக்தர்களுக்கு  உயர்வைகொடுக்கக்  கூடியதும் ,  அவர்களது துன்பங்களைப்  போக்கக்கூடியதுமான, பெருமையுடைய  உன் மென்மையான  பாதநுனியைப்  பிடித்து ,  உன் பாதத்தின் மென்மையை அறிந்த சிவனும் அளவற்ற ஆசையுடன் திருமணநாளன்று, எப்படித்தான் கடினமான  கருங்கல் அம்மிமீது வைத்தாரோ ?  கவிகளும்  இந்த மென்மையான பாதங்களின் மேல்பாகத்தை ஆமை முதுகு ஓட்டிற்கு  உவமையாகக்  எப்படித்தான்  கூறினாரோ" என்று கூறுகிறார். இதில் இருந்து இந்த லலிதா சகஸ்ரநாமம் சௌந்தர்யலஹரியை விட பழமையானது என்பது புலப்படுகிறது.

இவ்வாறு தேவியின் பாதத்தின் மேல்பாகமானது ஆமையின் முதுகு ஓட்டை விட அழகானது என்பதை "கூர்ம ப்ருஷ்ட ஜயிஷ்ணு ப்ரபதாந்விதா" என்று வாக்தேவிகள் அம்பிகையை போற்றுகின்றனர். மேலும் தேவியின் திருவடியின் மேல் பகுதியான புறங்கால்களை த்யானம் செய்வதால் புலனடக்கம் உண்டாகும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

No comments:

Post a Comment