Aug 12, 2017

32. ரத்ன க்ரைவேய சிந்தாக லோலா முக்தா பலான்விதா

ரத்ன க்ரைவேய சிந்தாக லோலா முக்தா பலான்விதா - அசைகின்ற முத்துக்களுடன் கூடிய ரத்தினப்பதக்கமும் பொருந்திய அட்டிகை அணிந்தவள்.

Lalitha


க்ரீவம் என்றால் கழுத்து. க்ரைவேயம் என்றால் கழுத்தில் அணியும் ஆபரணம். அம்பிகை ரத்தின அட்டிகையும், முத்து மாலைகளையும் அணிந்திருக்கிறாள். இந்த ஆபரணங்கள் தேவியின் கழுத்தில் அசைந்துக் கொண்டிருக்கின்றன.

அம்பிகையின் முழு உருவத்தையும், அதாவது தலை முதல் பாதம் வரை த்யானிக்க முடியாத ஆற்றல் அற்ற கீழான பக்தர்கள் லோலா எனப்படுவர்.
தேவியை தலை முதல் பாதம் வரை த்யானிக்கும் ஆற்றல் பெற்ற உயர்ந்த பக்தர்கள் முக்தா எனப்படுவர்.

லலிதாம்பிகை இந்த லோலாக்களையும், முக்தாக்களையும் பதக்கங்களாகவும், முத்து மாலைகளாகவும்  அணிந்திருக்கிறாள்.  இந்த லோலாவும் முக்தாவும் அவரவர் தகுதிக்கு தகுந்தாற் போல் பலனை பெறுவர்.

அணிகலன்களை அலங்காரத்துக்காக  மட்டுமில்லாமல் நீதிகளை அறிவுறுத்தவும் அணிகிறாள் அம்பிகை. அதாவது அம்பிகை அணியும் முத்துக்களாக நாம் மாற வேண்டும் என்ற குறிக்கோள் நமக்குள் ஏற்பட வேண்டும். தேவியினிடத்தில்  அசைந்து கொண்டிருக்கும் ஆபரணம் நம் மனதினை குறிக்கும். தேவியை வணங்கும் போது நம் மனதில் எந்த ஒரு சலனமும் தோன்றாமல் மனதினை அவள் பக்கம் செலுத்த முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறு அம்பிகை ரத்னம் மற்றும் முத்து பதித்த ஆபரணங்களை அணிந்திருக்கிறாள் என்பதை வாக்தேவிகள் " ரத்ன க்ரைவேய சிந்தாக லோலா முக்தா பலான்விதா" என்று போற்றுகின்றனர்.

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

No comments:

Post a Comment