Jan 26, 2017

சிந்துராருண விக்ரஹாம்



லலிதா

லலிதா சஹஸ்ரநாமத்தின் தியான ஸ்லோகம் ஆரம்பிப்பதே "சிந்துராருண விக்ரஹாம் த்ரிநயனாம்" என்று ஆரம்பிக்கிறது. அதாவது அன்னையை சிந்துர வர்ணத்தினள் என்று குறிப்பிடுகிறது. சிந்துர விக்ரஹாம் என்று இல்லாது சிந்தூராருண அதாவது சிந்தூர அருண விக்ரஹாம். அதாவது "உதிக்கின்ற செங்கதிர்" என்பதைத்தான் சிந்தூராருண விக்ரஹாம் என்று குறிப்பிடுகிறார்கள் இங்கே.

அன்னையைப் பலவிதங்களில் நமக்கு தெரியும், இவற்றையெல்லலம் மூர்த்தங்கள் என்போம். காமாக்ஷி, மீனாக்ஷி, தாக்ஷாயினி, அன்னபூர்ணேஸ்வரி என்பதாக பல மூர்த்தங்கள்/ரூபங்கள். இந்த ரூபங்கள் எல்லாமே பராசக்தி என்றாலும் இந்த மூர்த்தங்களுக்கென்று ஆயுதங்கள், நிறம் எல்லாம் தனியாக இருக்கிறது. மீனாக்ஷி என்றால் அவள் மரகத நிறத்தவள் என்றும் அன்ன பூரணி ஸ்வர்ண நிறத்தவள் என்றும், காமாக்ஷி சிவந்த நிறமென்றும் கூறப்படுகிறது.

அன்னை, தக்ஷனின் மகளாக தாக்ஷாயினி என்று சொல்லப்படும் போது அவள் உமாதேவி என்ற விதத்தில் கரிய நிறத்தவளாக அறியப்படுகிறாள். லலிதா, காமாக்ஷி, ராஜராஜேஸ்வரி போன்ற ரூபங்கள் சிவந்த ரூபமாக அறியப்படுகிறது. இதற்கான காரணத்தை பகவத்பாதர் "ஜகத் த்ராதும் கருணா: கசித் அருணா:" என்கிறார். அதாவது உலகைக் காக்க வந்தவள், அந்த செயலைச் செய்ய கருணையுடன் அருண ஸ்வருபமாக தன்னை காணச் செய்தாள் என்கிறார்.

சூரியன் உதிக்கும் நேரத்தில் சிவப்பாக இருப்பான். அந்த நேரத்தில் அந்த கிரணங்கள் பட்டு பூமியும் ஒருவிதமான இளஞ்சிவப்பினை தரும். இதையே பாலா திரிபுர சுந்தரியின் தியான ஸ்லோகத்தில் "அருண கிரண ஜாலை:" என்பதாகச் சொல்கிறார்கள். அதாவது அருணனின் கிரணங்கள் போன்ற நிறத்தவள் என்பதாக. மஹா விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்மா, இருக்கும் அந்த கமலத்தின் நிறமும் இளஞ்சிவப்பே. (வெள்ளைத்தாமரை சரஸ்வதிக்காக, ஞானத்தின் நிறமாக)பிரம்மனின் வேலை படைப்புத்தொழில் என நாமறிவோம்.

ஆக, படைப்பு என்ற தொழிலுக்கான நிறம் சிவப்பு, அதிலும் இளஞ்சிவப்பு என்பதாகக் கொண்ட காரணத்தால்தான் இவ்வாறாக சிந்தூராருண விக்ரஹாம் என்று கூறினார்கள். எனவேதான் அன்னை சிருஷ்டிக்கான வடிவில் வரும் சமயத்தில் கருமை நிறத்தில் வராமல் (கருமை என்பது அறியாமை மற்றும் தாமசத்திற்கான நிறம்) பூலோகத்தில் ஒவ்வொரு ஜிவனுக்கும் தாய் என்பவள் போல உலகிற்கெலாம் தாயாக இருந்து படைத்துக் காப்பதால் இளஞ்சிவப்பு நிறத்தில் படைத்துக் காக்க வருகிறாள். இவ்வாறாக சர்வ உலகங்களுக்கும் தாயாக இருப்பதை குறிப்பதாகவே சஹஸ்ரநாமத்தில் முதல் நாமமாக 'ஸ்ரீ மாதா' என்று ஆரம்பிக்கிறது.