Jun 30, 2017

14. குருவிந்த மணிச்ரேணீ கனத் கோடீர மண்டிதா

குருவிந்த மணிச்ரேணீ கனத் கோடீர மண்டிதா - பத்மராக ரத்தினக் கற்களின் வரிசைகளால் ஜொலிக்கின்ற கிரிடத்தினால் அலங்கரிக்கப் பெற்றவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா

குருவிந்தமணி என்பது பத்மராகக் கல். சிவப்பான பத்மராக கற்கள் அம்பிகையின் கிரிடத்தில் வரிசையாக அலங்கரிக்கப் பட்டுள்ளது. அம்பிகையின் மேனியை போலவே அவளது கிரிடமும் சிவந்த ஒளியினால் மிளிர்கிறது.
பொதுவாக ஆண்கள் அணியும் கிரிடத்தை மகுடம் என்பர். அவை கேசத்தை மறைக்கும்படியாக இருக்கும். பெண்கள் அணியும் கிரிடம் கோடீரம் என்பர். அவை புஷ்ப அலங்காரத்தையும், கேசத்தின் சுருள்களையும், அழகையும் மறைக்காதபடிக்கு அமைக்கப்பட்டிருக்கும்.
பக்தர்கள் அம்பிகையின் கிரிடமான கோடீரத்தை த்யானம் செய்தால் நல்ல எண்ணங்கள் மிகும்.
அம்பிகை இந்த சிவந்த கற்கள் பதித்த கோடீரத்தை அணிந்திருக்கிறாள் என்பதை "குருவிந்த மணிச்ரேணீ கனத் கோடீர மண்டிதா" என்று வாக்தேவிகள் போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Jun 29, 2017

13. சம்பகாசோக புந்நாக சௌகந்திக லஸத்கசா


சம்பகாசோக புந்நாக சௌகந்திக லஸத்கசா - சம்பகம்,  அசோகம்,  புந்நாகம்,  ஸௌகந்திகம், முதலிய பூக்களுக்கு வாசனையூட்டி அழகுற விளங்கும் கூந்தலை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


பொதுவாக மலர்களை சூடிக்கொண்டால் கூந்தலுக்கு வாசனை ஏற்படும். ஆனால் அம்பிகையின் இயற்கை மணமுடைய கூந்தல், பூக்களால் மணம் ஆக்கப்படவில்லை. அம்பிகையின் கூந்தல் மணத்தாலயே,  பூக்கள் மணம் பெறுகிறது. அவள்தான் மலர்களுக்கு மணத்தை தருகிறாள்.
இதை சௌந்தர்யலஹரியில் ஆதிசங்கரர், அம்பாளின் கேசத்தின் இயல்பான நறுமணத்தை எப்படியாவது கிரஹித்துக் கொள்ள வேண்டுமென்று, தேவலோக மரங்களின் மலர்கள் ஓடிவந்து அம்பாளின் கூந்தலில் ஏறி இருக்கின்றனவாம் என்று கூறியிருக்கிறார்.
அப்படியிருக்க சம்பகம், அசோகம், புந்நாகம், சௌகந்திகம்( செங்கழுநீர்) ஆகிய பூக்கள் அம்பிகையின் கேசத்தில் இருந்து மணத்தை எடுக்கின்றன என்பதை  "சம்பகாசோக புந்நாக சௌகந்திக லஸத்கசா" வாக்தேவிகள் போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Jun 28, 2017

12. நிஜாருண ப்ரபா பூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா

நிஜாருண ப்ரபா பூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா - தனது சிவந்த திருமேனியின் ஒளி வெள்ளத்தில் மூழ்கிய பெரிய அண்டங்களின் கூட்டத்தை உடையவள்.

Lalitha



அம்பிகை எல்லா இடங்களிலும் வ்யாபித்து இருக்கிறாள். சந்திர சூரிய குடும்பங்கள், விண்மீன்கள், நம் கண்ணில் தெரியும் ஆகாயம் ஆகிய அனைத்தும் சேர்ந்தால் அது ப்ரமாண்டம் எனப்படும். நிஜா என்றால் தனது உண்மையான, அருணா என்றால் சிவப்பு, ப்ரபா என்றால் ஒளி.

அம்பிகை அகில ப்ரமாண்ட நாயகி. அவள் ஆயிரம் சூரியனின் ஒளியுடன் வெளிப்பட்டவள். அவள் தன்னுடைய சிவப்பு நிறத்தால், அதன் ப்ரகாசத்தால் அந்த ப்ரமாண்டாத்தை முழுவதுமாக மூழ்கடிக்கிறாள். அதனால் தான் வாக்தேவிகள் அம்பிகையை "நிஜாருண ப்ரபா பூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா" என்று போற்றுகின்றனர்.

அம்பிகையை செந்நிற ஒளியுடையவளாக, சிந்தூர மேனியளாக, சிந்தூர வண்ணத்திளாக த்யானிப்பவருக்கு எல்லா சௌபாக்கியங்களும்  உண்டாகும்.


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

11. பஞ்ச தந்மாத்ர ஸாயகா

பஞ்ச தந்மாத்ர ஸாயகா - ஐந்து தன்மாத்திரைகளை பாணமாகக் கொண்டவள்.

லலிதா




அம்பிகையின் இடது கையில் கரும்பாகிய வில்லும், அந்த வில்லை செலுத்துவதற்கு அம்புகளாக வலது கையில் ஐந்து புஷ்பங்கள் பாணங்களாக இருக்கின்றது.
ஆகாயம், காற்று, அக்னி, நீர், பூமி என்பவை பஞ்சபூதங்கள். அவற்றின் குணங்களே சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம் ஆகும். இந்த ஐந்து குணங்களே பஞ்சதன்மாத்திரைகள் எனப்படும். நம்முடைய ஐந்து இந்திரியங்களாகிய காது,மெய், கண், நாக்கு, மூக்கு என்பவை செய்யப்படும் செயல்கள் இந்த ஐந்துதன்மாத்திரைகளை  தான்.
அதாவது காது சப்தத்தை கேட்கும், மெய் ஸ்பர்சமாகிய தொடு உணர்வை உணரும், கண் ரூபத்தை காணும், நாக்கு ரஸமாகிய சுவையை உணரும், மூக்கு கந்தமாகிய மணத்தை நுகரும் . இந்த தன்மாத்திரைகளே மனிதரின் மனதைக் கவர்ந்து உலக இன்பத்தில் புகுத்திவிடுகின்றன. அம்பிகை அந்த ஐந்து தன்மாத்திரைகளை தான் ஐந்து மலர் அம்புகளாக வைத்திருக்கிறாள்.
அம்பிகை பக்தர்களின் மனத்தை வில்லாக கொண்டு நம்முடைய புலன்களை, தன்மாத்திரைகளை மலர் அம்புகளாக வைத்துக் கொண்டிருக்கிறாள். அந்த தன்மாத்திரைகளை எங்கு செலுத்த வேண்டுமோ அங்கு செலுத்துவாள். உதாரணமாக கண் நல்லவையே பார்க்க வேண்டும், காது நல்ல விஷயங்களையே கேட்க வேண்டும் என்பதை அம்பிகை வழி நடத்துவாள். மனதை அம்பிகையிடம் விட்டு விட்டால், நம் மனம் தகாத விஷயங்களுக்குப் போகாது  என்பதால் தான் வாக்தேவிகள் அம்பிகையை "பஞ்ச தந்மாத்ர ஸாயகா " என்று போற்றுகின்றனர்.
மன்மதன் வைத்திருப்பதும்அந்த வில் அம்புகளைதான். மன்மதன் கையில் இருக்கும் போது அது நமக்கு சிற்றின்பத்திற்கு மனதை செலுத்துகிறது. அதுவே அம்பிகை கையில் இருக்கும்போது அந்த பாணங்கள் மோக்ஷகாமத்தில் இழுத்து செல்கின்றது. அதை பார்க்கும் போது அம்பாளுடைய ஸ்தோத்ர கீர்த்தனங்களையே கேட்க வேண்டும், அம்பாளுடைய சரணாரவிந்தங்களை ஸ்பர்சிக்க வேண்டும். அவளுடைய ரூபத்தை தர்சிக்க வேண்டும், அவளுடைய சரணதீர்த்தாம்ருதத்தை ருசிக்க வேண்டும், அவளுடைய நிர்மால்ய புஷ்பங்களை வாரிப் போட்டுக்கொண்டு திவ்ய ஸுகந்தத்தை அநுபவிக்க வேண்டும் என்பதாகப் பஞ்சேந்திரியங்களையும் திருப்பி விட்டுப் பரிசுத்தப்படுத்தி விடுகின்றன. அதனால் தான் அம்பிகையை " மனோ ரூபேஷு கோதண்டா பஞ்ச தன்மாத்ர ஸாயகா" என்று போற்றுகின்றனர்.
பஞ்ச புஷ்ப பாணங்களுக்கும் அதிதேவதை "வராஹி". இவள் அம்பிகையின் சேனாதிபதியும் ஆவாள்.

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Jun 25, 2017

10. மனோ ரூபேக்ஷு கோதண்டா

மனோ ரூபேக்ஷு கோதண்டா - மன வடிவமான கரும்பு வில்லை உடையவள்

Lalitha


லலிதாம்பிகையின் திருமேனியில் உள்ள இடது கரத்தில் கரும்பினால் ஆன வில் இருக்கின்றது. அது வெறும் கரும்பு வில் அல்ல. நம் மனம் தான் கரும்பு வில்லாக அமைந்திருக்கிறது.

மனிதர்கள் பிற உயிரினங்களை விட உயர்ந்தவர்கள் என்கிறோம். காரணம், மனிதர்களுக்கு மனம் என்ற ஒன்று இருப்பதால் தான். மனம் உள்ளவன் மனிதன். ஒவ்வொருவரும் தம் மனம் நினைக்கின்றபடி இருக்கவும்,செய்யவும், ஒன்றை அடையவும் ஆசை படுகிறோம். மனத்தை அடக்குவது என்பது சாதாரண காரியம் இல்லை.

ஆனால் இந்த மனம் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. சிந்திப்பது மூளை என்பது மட்டுமே விஞ்ஞான ரீதியாக தெரிகிறது. ஆனால் இயக்கும் மனமோ மனிதனுக்கு கூட தெரியாமல் மனித இனம் முழுவதையும் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. பக்தர்களின் அந்த மனத்தைதான் அம்பாள் கரும்பாக வைத்திருக்கிறாள்.

ஏன் கரும்பு? கரும்பை லேசாக வளைத்தாலே போதும், அது நன்றாக மடங்கி வளையும். அழுத்தி வளைத்தால் பட்டென்று உடைந்து விடும். அதுபோல தான் மனமும். அந்த மனத்தை அம்பிகையிடம் விட்டுவிட்டால் போதும், அவள் வளைக்கின்றபடியே அந்த மனம் வளையும். அதனால் தான் வாக்தேவிகள் அம்பிகையை "மனோ ரூபேக்ஷு கோதண்டா" என்று போற்றுகின்றனர்.

அம்பிகை வைத்திருக்கும் மனமாகிய கரும்பு வில்லிற்கு அதி தேவதை, "மந்த்ரினி" ஆவாள்.

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam

Jun 24, 2017

9. க்ரோதா காராங்குசோ ஜ்ஜ்வலா

க்ரோதா காராங்குசோ ஜ்ஜ்வலா - கோப  வடிவான அங்குசத்தோடு ஒளிர்பவள்.

லலிதா


அம்பிகையின் மேல் வலது கையில் அங்குசம் என்னும் ஆயுதம் உள்ளது. யானையை அடக்குவதற்கு யானை பாகன் அங்குசம் என்னும் கம்பு வைத்துக் கொள்வது உண்டு. அது போல, உலகியல் பந்தத்தால் நம்மை கட்டுகிறாள் அன்னை. அந்த பந்ததை எப்படி விலக்குவது? அதற்குத்தான் அங்குசம்.

அந்த அங்குசம் எப்படிப்பட்டதாம்?, ஜ்வலிக்கும் அங்குசமாம். எப்போதும் பளபளப்பான ஆயுதம் என்பது நன்கு தீட்டப்பட்டதாகத்தான் இருக்கும். எனவே உஜ்வலமான அங்குசம். சரி, குரோதம் எப்படி வந்தது? எந்த பந்தமும் குரோதம் உருவாவதால் அழிந்துவிடும். எனவே நம் அன்னை மாயையால் வரும் பந்தத்தை குரோதத்தால் அழித்து நம்மை வழிப்படுத்த அங்குசத்தை கொண்டிருக்கிறாள். எனவேதான் அம்பிகையை "க்ரோதா காராங்குசோ ஜ்ஜ்வலா " வாக்தேவிகள் துதிக்கின்றனர்.

அங்குசத்திற்கு அதிதேவதை ஸம்பத்கரி என்னும் சக்தி ஆவாள். இவள் அம்பிகையின் யானை படைத் தலைவி.
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam

8. ராக ஸ்வரூப பாசாட்யா

ராக ஸ்வரூப பாசாட்யா - விருப்ப (ஆசை) வடிவான பாசத்தை உடையவள்.

Lalitha


பாசம் என்றால் கயறு என்று ஒரு அர்த்தம் உண்டு. அம்பிகையின் இடது மேல் கரத்தில் அவளது பக்தர்களின் விருப்பமாகிய பாசம்  இருக்கிறது. ஐந்தொழில்களையும்  செய்ய விரும்பும் விருப்பு என்னும் இச்சா சக்தி அம்பிகையின் கையில் பாசம் என்னும் ஆயுதமாக இருக்கிறது.

பாசம் என்றாலே பந்தம், கட்டுவது, நம்மை கட்டி போட்டிருக்கும் ஒன்று. கயறு நம்மை எப்படி கட்டி போட்டு விடுமோ, அவ்வாறு ஆசை என்னும் பாசம் நம்மை கட்டிவிடும். ஆசையை அடக்க வேண்டுமாயின் அம்பிகையின் அருள் வேண்டும். அதனால் வாக்தேவிகள் அம்பிகையை "ராக ஸ்வரூப பாஸாட்யா" என்று போற்றுகின்றனர்.

அம்பிகை வைத்திருக்கும் பாசத்தின் அதி தேவதை அஸ்வாரூடா ஆவாள். இவள் அம்பிகையின் குதிரை படைக்குத் தலைவி ஆவாள்.

Jun 20, 2017

சதுர்பாஹு சமன்விதா


சதுர்பாஹு சமன்விதா - நான்கு கரங்களை கொண்டவள்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
லலிதா


சதுர்பாஹு சமன்விதா - நான்கு கரங்களை கொண்டவள்
இங்கிருந்துதான் அன்னையின் ரூப லாவண்யத்தை சொல்ல ஆரம்பிக்கிறார்கள் வாக்தேவிகள் .


எந்த ஒரு தெய்வ திருமேனியை பார்க்கும் போது சாதாரணமாக எல்லோரும் பார்ப்பது ஒரு கரம் அபய ஹஸ்தமாகவும், மற்றொரு கரம் வர ஹஸ்தமாகவும் இருக்கும். அவை மரண பயத்தை போக்கவும், வரத்தை அருளவும். நாம் அம்மா என்று அவள் கால்களில் விழும் போது அந்த பயத்தை அபய ஹஸ்தம் கொண்டு போக்குகிறாள். அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கும் போது வர ஹஸ்தம் நமக்கு வரத்தை அளிக்கிறது. 

ஆனால் லலிதாம்பிகையிடம்  அபய - வர ஹஸ்தம் இருக்காது. ஏனெனில் அவள் திருவடிகளே பயத்திலிருந்து காத்து விடுகிறது. அத்திருவடிகளே அவரவர் விரும்புவதற்கு அதிகமாக வரமும் அளித்து. 

"அபய - வர ஹஸ்தம் காட்டி ஆள வேண்டிய அவசியம் உனக்கு இல்லை அதனால் தான் உன் திருக்கரங்களில் அதற்கான அடையாளம் இல்லை" என்று ஆதிசங்கரர் சொன்னார். 

குழந்தைக்கு தேவயானதை தேவையான நேரத்தில் கொடுப்பதற்கு தாய்க்கு தெரியாதா?
மேலும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களையும் அவளே அருள்கிறாள் என்பதை காட்டும் பொருட்டு நான்கு கைகளுடன் அம்பிகை விளங்குகிறாள். அதாவது நான்கு கரங்களை கொண்டவள் என்பதை தான்  சதுர்பாஹு சமன்விதா என்று வாக்தேவிகள் அம்பிகையை போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam













6. உத்யத்பானு ஸஹஸ்ராபா

உத்யத்பானு ஸஹஸ்ராபா - ஆயிரக்கணக்கான உதயசூரியன்  போன்ற செம்மை நிறம் உடையவள்.

Lalitha

சிதக்னிகுண்டத்தில் இருந்து அம்பிகை எழுந்த போது,ஆயிரம் சூரியர்கள் ஒன்றாக உதித்தது போன்று காட்சி தந்தாள். சூரியன் எழுந்தவுடன் இருளும், குளிரும் நீங்கி, உலகம் சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குகிறது. வாழ்க்கையின் நம்பிக்கை ஒளியாக சூரியன் எழுகிறான். அது போல் ஆயிரம் மடங்கு நம்பிக்கையூட்டி, அருள் செய்ய அம்பிகை அறிவுக்கனலிலிருந்து எழும்பி வந்தாள்.
சூரியனின் சாரதி(தேரோட்டி) அருணன் செந்நிற கதிர்களுடன் சூரியன் உதிப்பதற்கு முன்னால் தோன்றுவான். அருணனின் நிறம் சிவப்பு. அவ்வாறு கருணையின் நிறமும் சிவப்பு. அம்பிகை தோன்றுவதற்கு முன்னால் அவளுடைய கருணை தோன்றிவிடுகிறது என்பதை “உத்யத்பானு ஸஹஸ்ராபா” என்று வாக்தேவிகள் அம்பிகையை போற்றுகின்றனர்.

5. தேவ கார்ய ஸமுத்யதா

தேவ கார்ய ஸமுத்யதா - தேவர்களுக்கு நன்மை செய்யும் காரியத்தில் முயற்சி உடையவள்

Lalitha


தேவர்கள் பண்டாசுரன் அழிவதற்காக யாகம் செய்தார்கள். அவர்களுடைய காரியத்தை  ஸித்தி செய்வதற்காகவும், பண்டாசுரனை வதம் செய்வதற்காகவும், தேவர்களுடைய ராஜ்ஜியத்தை அவர்களுக்கே மீட்டு தருவதற்காகவும் அம்பிகை தோன்றினாள்.

யாரிடத்திலெல்லாம் நற்குணம் அதிகரிக்கிறதோ அவர்கள் தேவர்கள். யாரிடத்திலெல்லாம் தீமை மிகுகிறதோ அவர்கள் அசுரர்கள். ஒருவன் நல்லவனாக இருந்து, நல்ல காரியங்களை அதிகமாக செய்து, தர்ம நிலையில் நிற்பவனாக இருந்தால் அவனுடைய காரியங்களை பூர்த்தி செய்து தருவதற்காகவும், தர்ம செயல்களை ரக்ஷிப்பதற்காகவும்  அம்பிகை வருவாள்.

நற்செயல்கள் புரியவே அம்பிகை நமக்கு உதவுகிறாள்  என்பதை “தேவ கார்ய ஸமுத்யதா” என்று வாக்தேவிகள் அம்பிகையை போற்றுகின்றனர்.

2. ஸ்ரீ மஹாராக்ஞி

ஸ்ரீ மஹாராக்ஞி - மேன்மை மிக்க பேரரசி

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா


ஸ்ரீ மஹாராக்ஞி என்பது சகல பிரபஞ்சத்திற்கும் ராணியாக இருந்து பரிபாலனம் செய்பவள் என்பதைக் குறிக்கிறது.

படைத்தல் என்பது சிறப்பானது என்றாலும் படைத்த படைப்பை காப்பாற்றுவது படைப்பதைவிட கடினமான செயல்தான்.

சர்வ லோகங்களையும் படைத்த ஸ்ரீமாதா, தான் படைத்த உலகங்களை சீராக இயக்கவும், அதில் உள்ள ஜீவராசிகளைக் காப்பதுமான செயலைச் செய்கையில் அவள் மஹாராக்ஞி என்று போற்றப்படுகிறாள்.

#சஹஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam

3. ஸ்ரீமத் ஸிம்ஹாசநேஸ்வரி

ஸ்ரீமத் ஸிம்ஹாசநேஸ்வரி - மேன்மை மிக்க சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ஈஸ்வரி

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா


மிருகங்களில் சிங்கம் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. அரசர்கள் சபையில் உட்காரும் ஆஸனமானது சிங்கத்தின் உருவங்கள் பொறிக்கப்பட்டு இருப்பதையும் அதனை ஸிம்ஹாசனம் என்பதையும் நாமெல்லாம் அறிவோம்.

அம்பிகை இந்த பிரபஞ்சத்துக்கே அரசி என்பதால் அவளது ஆசனம் ஸிம்ஹாசனமாகத்தானே இருக்க முடியும்.
லலிதாம்பிகைக்கு ஆசனம் சிம்மாசனம், வாகனம் சிம்ம வாகனம்.

லலிதாம்பிகையின் சிங்காசத்தினுடைய நான்கு கால்களும் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன் ஆகிய நால்வருமாக இருக்கின்றனர். ஸதாசிவனே மேற்பலகையாக இருக்கின்றார். இந்த ஐவரும் சேர்ந்து லலிதாம்பிகை உட்கார்ந்திருக்கும் போது சிம்மாசனமாகவும், ஸ்ரீசக்ரமென்னும் ரதத்தில் ஏறும் போதும், பக்தர்களை காக்கச் செல்லும் போதும் அந்த சிங்காசனமே சிம்ம வாகனமாக மாறி அவளை சுமந்து செல்கிறது. இந்த பெருமை பொருந்திய சிம்மாசனத்தை உடையவள் அம்பிகை என்பதால் ஸ்ரீமத்ஸிம்ஹாசநேஸ்வரி என்று போற்றப்படுகிறாள்.

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam

4. சிதக்னிகுண்ட சம்பூதா

சிதக்னிகுண்ட சம்பூதா - சிதக்னி குண்டத்திலிருந்து  தோன்றியவள்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Lalitha


சித் என்றால் அறிவு.  சித்+அக்னி என்றால் அறிவு கனலில் இருந்து அம்பிகை தோன்றினாள் என்பதாகும்.

பண்டாசுரன் வதம் செய்வதற்காக அம்பிகை தோன்ற வேண்டி சிவன் மற்றும் தேவர்கள் கடலை வற்ற வைத்து யாக குண்டமாக்கி அதில் மரங்களை சமித்தாக்கி, கடல் நீரை நெய்யாக்கி யாகம் வளர்த்தனர்.இறுதியில் தேவர்களும் சிவனாரும் வேள்வியில் இறங்கினர். அப்போது தான் தேவி யாகத்தில் மேலெழும்பி வந்தாள்.
நம் உடலாகிய யாக குண்டத்தில், அறிவாகிய தீயில், கெட்ட எண்ணங்களையும் தீய குணங்களையும் ஆகுதியாக இட்டுப் பொசுக்கினால், அங்கு அம்பிகையின் தோற்றம் ஏற்படுகிறது.
அதாவது என்று  தெய்வத்திடம் நாம் நம்மை முழுமையாக அனைத்தையும் அற்பணிக்கின்றோமோ அன்று அம்பிகை நம்மிடம் தோன்றுவாள் என்பதை சிதக்னிகுண்ட சம்பூதா என்று போற்றுகின்றோம்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சஹஸ்ரநாமம்

#lalitha #sahasranamam

1. ஸ்ரீ மாதா

ஸ்ரீமாதா - மேன்மை மிக்க தாய்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா

உலகத்தின் ஐந்தறிவு அல்லது ஆறறிவு பெற்ற எந்த உயிராக இருந்தாலும் எந்த மொழியில் பேசினாலும் அதனுடைய முதல் வார்த்தை""அம்மா"தான்.
நாம்  என்ன தவறுகள் செய்தாலும் தாய் ஒருத்திதான் அவற்றை எல்லாம் மன்னித்து நம்மை பேணுகிறாள். தந்தை, குரு போன்றவர்கள் செய்த தவறுக்கு தண்டனை அளித்தே நம்மைத் திருத்துவார்கள்.
நாம் பல தவறுகள் செய்தாலும் அதற்கான தண்டனை என்று ஏதுமில்லாது, நம்மிடம் கருணை காட்டுகின்ற அம்பிகையைத் தாயாக தியானிப்பது சரிதானே?. இதனால்தான் வசினி தேவதைகள் அன்னையை 'ஸ்ரீமாதா' என்று தியானித்து சஹஸ்ரநாமத்தை தொடங்குகிறார்கள்

#சகஸ்ரநாமம்