Jun 28, 2017

11. பஞ்ச தந்மாத்ர ஸாயகா

பஞ்ச தந்மாத்ர ஸாயகா - ஐந்து தன்மாத்திரைகளை பாணமாகக் கொண்டவள்.

லலிதா




அம்பிகையின் இடது கையில் கரும்பாகிய வில்லும், அந்த வில்லை செலுத்துவதற்கு அம்புகளாக வலது கையில் ஐந்து புஷ்பங்கள் பாணங்களாக இருக்கின்றது.
ஆகாயம், காற்று, அக்னி, நீர், பூமி என்பவை பஞ்சபூதங்கள். அவற்றின் குணங்களே சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம் ஆகும். இந்த ஐந்து குணங்களே பஞ்சதன்மாத்திரைகள் எனப்படும். நம்முடைய ஐந்து இந்திரியங்களாகிய காது,மெய், கண், நாக்கு, மூக்கு என்பவை செய்யப்படும் செயல்கள் இந்த ஐந்துதன்மாத்திரைகளை  தான்.
அதாவது காது சப்தத்தை கேட்கும், மெய் ஸ்பர்சமாகிய தொடு உணர்வை உணரும், கண் ரூபத்தை காணும், நாக்கு ரஸமாகிய சுவையை உணரும், மூக்கு கந்தமாகிய மணத்தை நுகரும் . இந்த தன்மாத்திரைகளே மனிதரின் மனதைக் கவர்ந்து உலக இன்பத்தில் புகுத்திவிடுகின்றன. அம்பிகை அந்த ஐந்து தன்மாத்திரைகளை தான் ஐந்து மலர் அம்புகளாக வைத்திருக்கிறாள்.
அம்பிகை பக்தர்களின் மனத்தை வில்லாக கொண்டு நம்முடைய புலன்களை, தன்மாத்திரைகளை மலர் அம்புகளாக வைத்துக் கொண்டிருக்கிறாள். அந்த தன்மாத்திரைகளை எங்கு செலுத்த வேண்டுமோ அங்கு செலுத்துவாள். உதாரணமாக கண் நல்லவையே பார்க்க வேண்டும், காது நல்ல விஷயங்களையே கேட்க வேண்டும் என்பதை அம்பிகை வழி நடத்துவாள். மனதை அம்பிகையிடம் விட்டு விட்டால், நம் மனம் தகாத விஷயங்களுக்குப் போகாது  என்பதால் தான் வாக்தேவிகள் அம்பிகையை "பஞ்ச தந்மாத்ர ஸாயகா " என்று போற்றுகின்றனர்.
மன்மதன் வைத்திருப்பதும்அந்த வில் அம்புகளைதான். மன்மதன் கையில் இருக்கும் போது அது நமக்கு சிற்றின்பத்திற்கு மனதை செலுத்துகிறது. அதுவே அம்பிகை கையில் இருக்கும்போது அந்த பாணங்கள் மோக்ஷகாமத்தில் இழுத்து செல்கின்றது. அதை பார்க்கும் போது அம்பாளுடைய ஸ்தோத்ர கீர்த்தனங்களையே கேட்க வேண்டும், அம்பாளுடைய சரணாரவிந்தங்களை ஸ்பர்சிக்க வேண்டும். அவளுடைய ரூபத்தை தர்சிக்க வேண்டும், அவளுடைய சரணதீர்த்தாம்ருதத்தை ருசிக்க வேண்டும், அவளுடைய நிர்மால்ய புஷ்பங்களை வாரிப் போட்டுக்கொண்டு திவ்ய ஸுகந்தத்தை அநுபவிக்க வேண்டும் என்பதாகப் பஞ்சேந்திரியங்களையும் திருப்பி விட்டுப் பரிசுத்தப்படுத்தி விடுகின்றன. அதனால் தான் அம்பிகையை " மனோ ரூபேஷு கோதண்டா பஞ்ச தன்மாத்ர ஸாயகா" என்று போற்றுகின்றனர்.
பஞ்ச புஷ்ப பாணங்களுக்கும் அதிதேவதை "வராஹி". இவள் அம்பிகையின் சேனாதிபதியும் ஆவாள்.

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

No comments:

Post a Comment