Apr 15, 2018

56. ஸ்ரீமந் நகர நாயிகா


ஸ்ரீமந் நகர நாயிகா - மேன்மை பொருந்திய ஸ்ரீநகரத்தின் தலைவியாக இருப்பவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா



தேவி லலிதாம்பிகை புனிதமான எல்லா செல்வ வளங்களும் நிறைந்த ஸ்ரீநகரத்தின் அதிபதியாக இருக்கிறாள். இந்திர நகரமான அமராவதி, ப்ரம்மலோகம், வைகுண்டம், கைலாயம் இவைகளை காட்டிலும் மேன்மை உடையது ஸ்ரீநகரம்.

சிவனுக்குக் கைலாஸம், விஷ்ணுவுக்கு வைகுண்டம் போல், லலிதாம்பாளுக்கும் தனி லோகம் உண்டு. அவர்களுக்கு ஒவ்வொரு வாஸஸ் ஸ்தானம்தான். ஆனால் அம்பிகைக்கோ இரண்டு. அதில் ஒன்று பிரம்மாண்டம் என்கிறதற்குள்ளேயே எல்லா க்ரஹங்களும் தன்னைச் சுற்றி வரும்படி மத்தியிலில் இருக்கும் மேரு சிகரத்தில் இருப்பது. அதாவது, மேரு மலையின் நடுவில் உள்ள சிகரத்தில் அம்பிகையின் இருப்பிடமான ஸ்ரீநகரம் உள்ளது.
அந்த மேருவிலேயே வேறே மூன்று சிகரங்களில் ப்ரம்ம லோகம், விஷ்ணு லோகம், சிவலோகம் ஆகியவை இருப்பதாகவும் அந்த மூன்றுக்கும் நடுநாயகமான பிரதான சிகரத்திலே அம்பாள் லோகம் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறது.

இது தவிர இந்த ப்ரஹ்மாண்டத்திலேயே அடங்காமல் தனி லோகமாக ஸ்ருஷ்டி செய்துக்கொண்டு அதற்குள்ளே ஒரு த்வீபத்திலும் (தீவிலும்) வசிக்கிறாள். அதாவது அம்ருதக்கடலின் நடுவில் தேவி தனக்கென்று அமைத்துக் கொண்ட இடம் ஸ்ரீநகரம்.

மேரு மத்தியானாலும் சரி, அம்ருதகடலானாலும் சரி, அவளுடைய ஊருக்கு போய்விட்டால் அங்கே ஒன்றும் வித்யாசம் இல்லை. வெளிக் கோட்டையிலிருந்து ஆரம்பித்து அரண்மனையில் அவள் கொலுவிருக்கும் இடம் வரையில் இரண்டிலும் ஒரே மாதிரியான பிராகாரங்கள், வனங்கள், தடாகங்கள், பரிவாரங்கள்தான். அந்த தலைநகரத்திற்கு ஸ்ரீநகரம் என்று பெயர்.

ஸ்ரீநகரத்தை ஸ்ரீபுரம் என்றும் சொல்வதுண்டு. அது இருபத்தைந்து கோட்டைகளும் பிராகாரங்களும் சூழ்ந்தது. முதலில் இரும்பில் இருந்து ஸ்வர்ணம் வரை ஒவ்வொரு லோகத்தால் ஒவ்வொரு கோட்டை. அப்புறம் நவரத்தினங்கள் ஒவ்வொன்றாலும் ஒவ்வொரு கோட்டை. இப்படியே ஸூக்ஷ்மமாகப் போய் மனசாலேயே ஆன கோட்டை, புத்தியாலேயே ஆன கோட்டை, அஹங்காரத்தில் ஆன கோட்டை எல்லாம் உண்டு. கடைசியில் ஸூர்ய தேஜஸ், சந்திர தேஜஸ், மன்மத தேஜஸ் இவற்றைக் கொண்டே ஒவ்வொரு கோட்டை. கோட்டைகளுக்கு நடுவே திவ்ய வ்ருக்ஷங்கள் உள்ள பல வனங்கள், பல ஓடைகள். எல்லாம் தாண்டிப் போனால் இருபத்தைந்தாவது  ப்ராகாரம் மஹா பத்மவனம் என்று ஒரே தாமரை மயமாய்ப் பூத்த ஓடை வரும். அது அகழி மாதிரி. அதற்குள்ளே செங்கலுக்குப் பதில் சிந்தாமணிக் கற்களையே வைத்துக் கட்டியதான அம்பாளின் அரண்மனை வரும்.

இவ்வாறு, தேவி லலிதாம்பிகை பக்தர்களுக்கு ராஜராஜேஸ்வரியாக காட்சி கொடுத்து அருள் செய்யும் தலைநகரமாக விளங்குவது ஸ்ரீநகரம். இவ்வாறு தேவி ஸ்ரீநகரத்தின் தலைவியாக இருக்கிறாள் என்பதை வாக்தேவிகள் "ஸ்ரீமந் நகர நாயிகா" என்று லலிதாம்பிகையை போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

No comments:

Post a Comment